தண்ணீரின்றி கருகும் கோடை நெற்பயிர்

தஞ்சை,மே 14: தஞசை மாவட்டத்தில் தற்போது கோடை நெல் சாகுபடி சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் மின் மோட்டார் மூலம் நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த ஏப்ரல் மாதம் விதைநெல் தெளித்து, மே முதல் வாரத்தில் நாற்று நடவு செய்தனர். இந்நிலையில் கடுமையான கோடை வெயிலால் ஆறுகள், குளங்கள், வாய்க்கால்கள் அனைத்தும் தண்ணீர் வறண்டு விட்டதால், ஆழ்குழாய் மின்மோட்டார் வைத்திருப்பவர்களுக்கு தண்ணீர் வரத்து குறைந்து விட்டது. இதனால் கோடை நெற்பயிர் வயலுக்கு தண்ணீர் இறைப்பதற்கு சிரமத்துக்குள்ளாகினர். இதனால் அருகில் உள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. தஞ்சை மாவட்டம் மெலட்டூரில் சுமார் 1000 ஏக்கருக்கு மேல் கோடை நெல் சாகுபடி செய்துள்ளனர். நிலத்தடி நீர் மட்டும் குறைந்து ஆழ்குழாய் மின் மோட்டாரில் தண்ணீர் வரத்து போதுமானதாக இல்லாததால், அப்பகுதியில் சாகுபடி செய்துள்ள அனைத்து நாற்றுகள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், கோடை நாற்றுகள் தற்போது சூல் விடும் பருவத்தில் இருப்பதால், போதுமான தண்ணீர் விடாமல் அனைத்தும் பதறாகி விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவு செய்து, போதுமான தண்ணீரின்றி அனைத்து பயிர்களும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதால், கோடை சாகுபடி செய்த அனைத்து விவசாயிகளும் வேதனையில் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் கோடை நெற்பயிர் செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.45ஆயிரம் வரை இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அன்னப்பன்பேட்டை விவசாயி சங்க செயலாளர் சீனிவாசன் கூறுகையில்,மெலட்டூரில் ஆழ்குழாய் மோட்டாரில் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும். இதை நம்பி விவசாயிகள் கோடை சாகுபடி செய்வார்கள். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆறு, குளங்கள், வாய்க்கால்களில் தண்ணீர் வரத்து இல்லாததால், அனைத்து பகுதிகளிலும் நீலத்தடி நீர்மட்டும் குறைந்து விட்டது. இதனால் ஆழ்குழாய் கிணறுகளில் போதிய தண்ணீர் வரத்தின்றி நிலங்கள் காய்ந்து வெடிப்போடி கிடக்கிறது. இதனால் பயிர்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக குறுவை சாகுபடி பொய்த்துபோன நிலையில், இந்த ஆண்டும் அதே நிலை நீடிப்பதால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.

Related Stories: