அரியலூர், ஜன. 8: அரியலூர் அண்ணாசிலை அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், அரசுத்துறை காலிப்பணியிடங்களை நிரப்பும் போது 10 ஆண்டு பணி முடித்த தகுதியுள்ள சத்துணவு – அங்கன்வாடி பணியாளர்களை 50 சதவீதம் சேர்க்க வேண்டும்.
வருவாய் கிராம உதவியாளருக்கு உள்ளது போல் சிறப்பு ஓய்வூதியம். ரூ.6,750 அகவிலைப்படி வழங்க வேண்டும். சத்துணவு – அங்கன்வாடி பணியாளருக்கு இளநிலை உதவியாளர் நிலையில் ரூ.19,500, சமையலர் மற்றும் உதவியாளருக்கு ரூ.15,700 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் தமிழரசன், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஜாகிர் உசேன் ஆகியோர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
