அரியலூர், ஜன. 9: அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் கோரிக்கையை வலியுறுத்தி 4வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி அரியலூரில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் 4 ஆவது நாளாக நேற்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில், தேர்தல் வாக்குறுதி அளித்தபடி, 2009க்குப் பிறகு நியமிக்கப்பட்ட 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்துக்கு, அந்த இயக்கத்தின் மாவட்ட பொருளாளர் நடராசன் தலைமை வகித்தார்.
மாவட்ட மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் செண்பகம், பொறுப்பாளர்கள் ஜெயங்கொண்டம் சரவணன், ஆண்டிமடம் செல்வகுமார், செந்துறை ஜனனி, திருமானூர் சங்கீதா, தா. பழூர் மணிகண்டன் மற்றும் 150 க்கும் மேற்பட்டோர் இயக்க நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
