அரியலூர், ஜன. 1: அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், திருமானூர் ஊராட்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், திருச்சி மண்டலம், லால்குடி கிளை மூலம் புதிய மகளிர் விடியல் பயண 2 பேருந்துகளையும், திருவையாறு கிளை மூலம் ஒரு பேருந்து வழித்தடத்தினை நீட்டிப்பு செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர், ஏலாக்குறிச்சி பகுதியில் புதிய துணை மின் நிலையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா ஆகியோர் கலந்துகொண்டனர். அரியலூர் மாவட்டம் திருமானூர் பேருந்து நிலையத்தில் நேற்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம், திருச்சி மண்டலம், லால்குடி கிளை மூலம் நகர் பேருந்து லால்குடியிலிருந்து புள்ளம்பாடி வழியாக வெங்கனூர், லால்குடியிலிருந்து புள்ளம்பாடி, திருமழப்பாடி வழியாக திருமானூர் என இரண்டு மகளிர் விடியல் பயண பேருந்துகளையும், திருவையாறு பேருந்து நிலையத்திலிருந்து வெங்கனூர் வரை 4 நடைகள் இயக்கப்பட்டு வருவதனை கோவில்எசனை, விளாகம், சன்னாவூர் வழியாக கல்லக்குடி வரை 9 கி.மீ தட நீட்டிப்பு செய்து, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து ஏலாக்குறிச்சி பகுதியில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் ரூ.14.55 கோடி மதிப்பில் 110/22 கேவி துணை மின் நிலையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.
பின்னர் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் தெரிவித்ததாவது:
அரியலூர் கோட்டத்தில் திருமானூர் பகுதியில் ஏலாக்குறிச்சிக்கு அருகில் உள்ள பகுதிகளில் சீரான மின்சாரம் வழங்குவதற்கு புதிய துணை மின் நிலையம் அமைத்திடும் பணிகள் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏலாக்குறிச்சி பகுதியினை சுற்றியுள்ள ஏலாக்குறிச்சி, கோவிலூர், சின்னப்பட்டாக்காடு, பெரியப்பட்டாக்காடு, கீழஎசனை, செட்டிக்குழி, சுள்ளங்குடி, பெரியமறை, விழுப்பணங்குறிச்சி, மேலரப்பன்குறிச்சி, கீழவரப்பன்குறிச்சி, அழகியமணவாளம், ராமநல்லூர், மாத்தூர், காமரசவல்லி, செங்கராயன்கட்டளை, வாண்டராயன்கட்டளை, அரசஞ்சேரி, தேளுர், தூத்தூர், குருவாடி, வைப்பூர், கோமான் உள்ளிட்ட கிராமங்கள் பயன்பெறும். இப்பகுதியில் உள்ள 12,000 மின் நுகர்வோர்களுக்கு சீரான மின்சாரம் வழங்குகின்ற வகையில் அமையவுள்ள 110 கிவோ ஏலாக்குறிச்சி துணை மின்நிலையம் ஏறத்தாழ 9.19 கி.மீ தூரம் வரை மின்சாரம் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் நிலவி வந்த குறைந்த மின்னழுத்தம் என்ற பிரச்சனை சரிசெய்யப்படும்.
இப்பகுதியில் உள்ள மின் நுகர்வோர்கள் எந்தவித பிரச்சனையுமின்றி மின்சார பயன்பாட்டினை பெறும் வாய்ப்பு கிடைக்கப்பெறவுள்ளது. இப்புதிய துணை மின் நிலையமானது ரூ.14 கோடியே 55 இலட்சம் மதிப்பீட்டில் அமையவுள்ளது. அதன்படி 10 கி.மீ தூரத்திற்கு 110 கிவோ மின்பாதைகள் அமைக்கப்படவுள்ளது. ஏலாக்குறிச்சி பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு இதன் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், கும்பகோணம் நிர்வாக இயக்குநர் தசரதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டலம் பொது மேலாளர் சதீஸ்குமார், மின்சாரத்துறை மேற்பார்வை பொறியாளர் பெரம்பலூர் மேகலா, மின்சாரத்துறை செயற்பொறியாளர் அரியலூர் அய்யனார், போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளர் பெரம்பலூர், திருவையாறு கிளை மேலாளர் சரவணன், அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, திமுக ஒன்றிய செயலாளர்கள் கென்னடி, அசோக் சக்கரவர்த்தி, முருகன், அன்பழகன், திமுக மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் லூயி கதிரவன், திமுக மாவட்ட துணைச் செயலாளர்கள் அருங்கால் சந்திரசேகர், லதா பாலு, மதிமுக ஒன்றிய செயலாளர் சங்கர் , அரியலூர் போக்குவரத்து பணிமனை செயலாளர் வாரணாசி அன்பழகன், தொழிற்சங்க பிரதிநிதிகள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
