குன்னம், ஜன.1: வேப்பூர் ஒன்றியம் துங்கபுரம் ஊராட்சி கிளியப்பட்டு கிராமம் வடக்கு தெருவில், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த தெருவில் உள்ள மண்சாலை கடந்த இரண்டு ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக காணப்படும் இந்த சாலையால் அப்பகுதியில் வசிக்கும் முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் தெருவில் நடப்பதற்கும், இருசக்கர வாகனத்தில் செல்வதற்கும் மிகவும் சிரமப்படுகின்றனர். மேற்கண்ட தெருவில் உள்ள சாலையை சீரமைக்க பல்வேறு மனுக்கள் அளித்தும் அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே, இந்த மண்சாலையை சீரமைத்து புதிய தார்சாலை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
