இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் போதை பொருள் பறிமுதல் அதிகரிப்பு: ஐநா அறிக்கையில் தகவல்

ஐநா:  இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில்,போதை பொருள்கள் பறிமுதல் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக  ஐநா போதை கடத்தல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஐநாவின் கண்காணிப்பு பிரிவான சர்வதேச போதை பொருள் கடத்தல் கட்டுப்பாடு வாரியம்  வருடாந்திர அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில், சட்ட விரோதமாக  போதை மாத்திரைகள் தயாரிப்பதை கட்டுப்படுத்துவதற்கு இந்தியா பல்வேறு  ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கடத்தல் கும்பல்கள் ஆன்லைன்  மற்றும் கடல் மார்க்கத்தில் இதனை பயன்படுத்தி வரும் நிலையில் இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் போதை  பொருள்கள் பறிமுதல் அதிகரித்துள்ளன.

கடந்த 2017ம் ஆண்டு-2022 ம் ஆண்டு  காலக்கட்டத்தில் ஹெராயின் போதை பொருள் பறிமுதல் 2,146 கிலோவில் இருந்து 7,282 கிலோவாக அதிகரித்துள்ளது.  அபின் கடத்தலும் 70 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, கடந்த 2017ம் ஆண்டு 2,551 கிலோவாக இருந்த நிலையில் 2021ல்  4,386 ஆக அதிகரித்துள்ளது.  2017ல்  3,52,539 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது 2021ல் 6,75,631 கிலோ ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில்  கன்டெய்னர்கள் மூலம் போதை பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது.  2021 செப்டம்பர் மாதம் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் கன்டெய்னரில்  இருந்து 3 டன் ஹெராயின்  பறிமுதல் செய்யப்பட்டது.

இதன் மூலம்    அரபி கடல் வழியே  போதை கடத்தல் அதிகரித்துள்ளது உறுதியாகிறது.   அதே ஆண்டில் ஆசிய நாடுகளில் இந்தியாவில் இருந்து மட்டும் 364 கிலோ கோகைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய 3 ஆண்டுகளில்  சராசரியாக 40 கி. பறிமுதல் செய்யப்பட்டது.  சர்வதேச அளவில் போதை மாத்திரை பயன்படுத்துவோர் அதிகரித்துள்ள  நிலையில், சட்டவிரோதமாக தயாரிக்கப்படும் மெத்தாம்பேட்டமைன் மற்றும் கேட்டமைன்  போதை மாத்திரைகளின் உற்பத்தி மற்றும் கடத்தலும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஏராளமான கெமிக்கல் மற்றும் மருந்து நிறுவனங்கள்  உள்ளன. இதில் சட்ட விரோதமாக போதை மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன.சட்டவிரோத போதை மாத்திரைகள் தயாரிக்கப்படுவதை தடுக்க  அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: