பக்தர்கள் ‘அரோகரா’ கோஷம் முழங்க பழநியில் தைப்பூச திருவிழா தேரோட்டம் கோலாகலம்: பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பு

பழநி: பழநியில் பக்தர்கள் ‘அரோகரா’ கோஷம் முழங்க தைப்பூச திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் தைப்பூச திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூச தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு வள்ளி, தேவசேனா சமேத முத்துக்குமாரசுவாமி தோளுக்கினியாளில் சண்முகநதிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. காலை 11.45 மணிக்கு மேல் மேஷ லக்னத்தில் பெரியநாயகி அம்மன் கோயிலில் சுவாமி தேரேற்ற நிகழ்ச்சி நடந்தது.

இதை தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி வள்ளி - தெய்வானை சமேதரராய் முத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கிழக்கு ரத வீதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயில் முன்பிருந்து விநாயகர், வீரபாகு ஆகியோர் தனித்தனி தேர்களில் ரத வீதிகளில் உலா வந்தனர். தொடர்ந்து பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் முழங்க, தைப்பூசத் தேர் ரதவீதிகளில் பவனி வந்தது. தேர் நிலைக்கு வந்தவுடன் தந்தப்பல்லக்கில் தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. பழநி நகரில் கடந்த 2 நாட்களாகவே லேசான தூறல் மழை பெய்து வந்தது. இருப்பினும் தேரோட்டம் காரணமாக நேற்று முன்தினம் முதலே, பழநியில் பக்தர்கள் குவியத் துவங்கினர்.

வின்ச் நிலையம் மற்றும் ரோப்கார் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பயணம் செய்தனர். லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் நெரிசலின்றி சாமி  தரிசனம் செய்வதற்கு சன்னதி வீதியில் இருந்தே தடுப்புகளை அமைத்து நிறுத்தி, நிறுத்தி தரிசனத்திற்கு  அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு தடுப்புக்குள்ளேயும் குடிநீர் வசதி மற்றும்  நிழற்பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. விழாவையொட்டி பழநி நகரில் நேற்று காலை சூரிய உதயத்தின்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் இடும்பன் குளம் மற்றும் கிரிவீதிகளில் சூடம் ஏற்றி சூரிய வழிபாடு செய்தனர்.

திருச்செந்தூரில்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா, இன்று நடக்கிறது. இதையொட்டி இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை தீர்த்தவாரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், வேல் குத்தியும், காவடி எடுத்தும் பாதயாத்திரையாக வருகின்றனர்.

* வடலூரில் இன்று ஜோதி தரிசனம்

கடலூர் மாவட்டம் வடலூர் திரு அருட்பிரகாச வள்ளலார் சத்திய ஞான சபையில், 152வது ஆண்டு ஜோதி தரிசன விழாவையொட்டி, நேற்று அதிகாலை 5 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் பாடப்பட்டது. தொடர்ந்து காலை 7.30 மணிக்கு தரும சாலையில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. வள்ளலார் பிறந்த ஊரான மருதூர் வள்ளலார் இல்லத்தில் மருதூர் கிராம மக்களால் கொடியேற்றப்பட்டது.  இன்று காலை 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

Related Stories: