கலசபாக்கம் செய்யாற்றில் அண்ணாமலையாருக்கு பக்தர்கள் வெள்ளத்தில் ரதசப்தமி தீர்த்தவாரி

கலசபாக்கம்: கலசபாக்கம் செய்யாற்றில் நேற்று பக்தர்கள் வெள்ளத்தில் அண்ணாமலையார், திருமா முடீஸ்வரருக்கு தீர்த்தவாரி நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் செய்யாற்றில் ரதசப்தமி தீர்த்தவாரி நேற்று நடந்தது. இதையொட்டி உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் நேற்று காலை சிறப்பு அலங்காரத்துடன் திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டார். வரும் வழியில் துரிஞ்சாபுரம் ஒன்றியம் தனகோட்டிபுரம் கிராமத்தில் அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை பார்வையிடும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து, நிலத்தை வலம் வந்தபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பின்னர் கலசபாக்கம் செய்யாற்றுக்கு வந்தபோது தென் பள்ளிப்பட்டு ஊராட்சி மதுரா மேட்டுப்பாளையம் பகுதியில் மேளதாளம் முழங்க அண்ணாமலையாருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதேபோல் கலசபாக்கத்தில் இருந்து திரிபுரசுந்தரி சமேத திருமாமுடீஸ்வரரும் மேளதாளத்துடன் பக்தர்கள் வெள்ளத்தில் செய்யாற்றை வந்தடைந்தனர். அங்கு இரு சுவாமிகளும் நேருக்கு நேர் சந்திக்கும் நிகழ்வு நடந்தது. பின்னர், முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி நடைபெற்றது. செய்யாற்றில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் செய்யாற்றில் அமைக்கப்பட்ட மெகா பந்தலில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், திரிபுரசுந்தரி சமேத திருமாமுடீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இதில், கலசபாக்கம், பூண்டி, மோட்டூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அரோகரா என பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டனர். செய்யாற்றில் போதிய மழை இல்லாததால் சில ஆண்டுகளாக ஆற்றில் பெரிய பள்ளம் எடுத்து தண்ணீரை நிரப்பி தீர்த்தவாரி நடத்தி வந்தனர். ஆனால் கடந்த ஆண்டு முதல் தொடர்மழையால் செய்யாற்றில் தண்ணீர் ஓடுகிறது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆற்று நீரைக் கொண்டு தீர்த்தவாரி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: