பெரியகுளம் அருகே வியாபாரிகளிடையே தகராறு வெள்ளை பூண்டுகளை சாலையில் கொட்டி போராட்டம்

பெரியகுளம்: பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியில் தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து விளைவிக்கப்படும் வெள்ளைப் பூண்டுகள் கொண்டுவரப்பட்டு இங்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல் மாவட்டம் வி.எஸ். கோட்டைப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் பிரியா தம்பதியினர், கடந்த 15 ஆண்டுகளாக வடுகபட்டி வெள்ளை பூண்டு சந்தையில் பூண்டு வாங்கி திருப்பூர், கோவை, ஈரோடு, உள்ளிட்ட மாவட்டங்களில் விற்பனை செய்வதற்காக ரூ.60 ஆயிரத்திற்கு 2500 கிலோ வெள்ளைப் பூண்டை வாங்கி சென்றுள்ளனர்.

இந்நிலையில், வாங்கிய வெள்ளைப் பூண்டுகளை கோவை மாவட்டத்தின் கிராம பகுதியில் விற்பனை செய்துள்ளனர். இந்த பூண்டுகளை வாங்கிய பொதுமக்கள் தரமற்ற பூண்டுகளை ஏன் விற்பனை செய்கிறீர்கள் என சுரேஷ் மற்றும் அவரது மனைவியை தாக்கியுள்ளனர். இந்நிலையில், கோவையில் இருந்து நேரடியாக வெள்ளைப் பூண்டு வாகனத்துடன் சுரேஷ் மற்றும் பிரியா தம்பதியினர், பெரியகுளம் வந்து வெள்ளை பூண்டு மொத்த வியாபாரி திலீப் என்பவரிடம் முறையிட்டனர்.

அவர் வெள்ளைப் பூண்டை வாங்க மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்னை ஆனது. இதனைத் தொடர்ந்து சில்லறை வியாபாரி சுரேஷ் வாங்கிய வெள்ளைப் பூண்டு மூட்டைகளை அண்ணாமலை ட்ரேடர்ஸ் எதிரில் உள்ள சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து வந்த செய்தியாளர்களை மொத்த வியாபாரி மற்றும் அவரது ஊழியர்கள் அவதூறாகவும் பேசி அராஜகத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

Related Stories: