தமிழ்நாட்டில் மின்தேவையை சமாளிக்க கூடுதலாக 3,286 மி.யூனிட் மின்சாரம் கொள்முதல்

சென்னை: தமிழ்நாட்டில் மின் தேவையை சமாளிக்க கூடுதலாக 3,286 மில்லியன் யூனிட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மின்தேவை அதிகமாகவே இருந்து வருகிறது. கடந்த ஜனவரியில் 17,000 மெகா வாட் மின்தேவை தாண்டிவிட்டதால், கோடையில் 20,000 மெகாவாட்டை தாண்டும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் அந்த அளவுகளையும் தாண்டி கோடை காலத்தில் மின் தேவை பதிவானது.

கடந்த 2ம் தேதி தமிழகத்தின் தினசரி மின்தேவை 20,830 மெகாவாட்டாக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியிருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்ததால் மின் தேவை குறைந்தது. தற்போது மீண்டும் சென்னை மற்றும் மாநிலம் முழுவதும் மின்தேவை இயல்பு நிலைக்கு திரும்பியது. மின்வாரியத்தின் மின் நிலையங்களிலிருந்து கிடைக்கும் மின்சாரமும், மத்திய மற்றும் தனியார் நிறுவன மின்சாரமும் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யாது என்பதால் வெளிச்சந்தைகளில் இருந்து கொள்முதல் செய்தும், மற்ற மாநில மின் நிறுவனங்களிடமும் பரிமாற்ற முறையில் மின்சாரம் பெறப்படுகிறது.

இந்நிலையில் வரும் நாட்களில் கூடுதல் மின் தேவையை சமாளிக்க 3,286 மில்லியன் யூனிட் மின்சாரத்தை குறுகிய கால ஒப்பந்தத்தில் மின் வாரியம் கொள்முதல் செய்ய உள்ளது. இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மின்தேவை சாதாரணமாக இருந்த போது மின்சாரம் யூனிட் ஒன்றுக்கு ரூ.8.22க்கு வாங்கப்பட்டது. உச்சகட்ட தேவையை பூர்த்தி செய்ய, மார்ச், ஏப்ரல், மே மாத மின் தேவையை சமாளிக்க யூனிட்டுக்கு ரூ.9.99 வரை கொள்முதல் செய்யப்பட்டது. மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்த பிறகே மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது.

மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி, தேவையை சமாளிக்க ரூ.2,755 கோடிக்கு 3,286 மில்லியன் யூனிட் மின்சாரம் வாங்கப்பட உள்ளது. 2023ம் ஆண்டு பிப்ரவரி முதல் மே வரையிலான
மாதங்களுக்கு டெண்டர் மூலம் 24 மணி நேரமும் மின்சாரம் வாங்குவதற்கான செலவு ஒரு யூனிட்டுக்கு 8.50 ஆக இருந்தது மற்றும் உச்சநேரம் மின்சாரம் மட்டும் ஒரு யூனிட்டுக்கு ரூ.11.67, யூனிட்டுக்கு ரூ.10.14 மற்றும் ரூ.10.02 என்ற விலையில் வாங்கப்பட்டது. அதிக தேவை மற்றும் குறைந்த சப்ளை இருக்கும் இடங்களில் விற்பனை ஏலத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக கொள்முதல் ஏலங்கள் எப்போதும் இருக்கும். இருப்பினும் மக்களுக்கு சுமையை அதிகரிக்காத வகையில் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பரவலாக கோடை மழை பெய்து வருவதால் தினசரி மின்தேவை கணிசமாக குறைந்துள்ளது. இந்த வாரம் முதல் காற்றாலை மின் உற்பத்தி தொடங்கும் என்பதால் மே மாதத்திற்கான குறைந்தபட்ச மின் தேவையை சமாளிக்க காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post தமிழ்நாட்டில் மின்தேவையை சமாளிக்க கூடுதலாக 3,286 மி.யூனிட் மின்சாரம் கொள்முதல் appeared first on Dinakaran.

Related Stories: