முல்லை பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்ட திட்டம்: கேரள அரசை கண்டித்து 27ம் தேதி குமுளி நோக்கி விவசாயிகள் பேரணி

கூடலூர்: முல்லை பெரியாறு அணைப்பகுதியில், புதிய அணை கட்ட திட்டமிடும் கேரளாவை கண்டித்து நாளை மறுநாள் குமுளி நோக்கி விவசாய சங்கம் சார்பில் பேரணி நடத்தப்பட உள்ளது. முல்லை பெரியாறு அணைப்பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பாக ஒன்றிய அரசு கொடுத்துள்ள ஒப்புதல் குறித்து, உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டுமென கேரள அரசு தரப்பில் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வரும் 28ம் தேதி நடக்க உள்ள ஒன்றிய சுற்றுச்சூழல் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட உள்ளதாக ஒன்றிய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் செயல் என தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பெரியாறு – வைகை பாசன விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறியதாவது:

1979ல் ஆரம்பித்த பெரியாறு அணை பிரச்னை இன்னும் தீர்ந்தபாடில்லை. பெரியாறு அணையை இடித்துவிட்டு இடுக்கி அணைக்கு தண்ணீரை கொண்டு போக வேண்டும் என்று கேரள அரசு நினைக்கிறது. உச்சநீதிமன்றம் நியமித்த இந்தியாவின் தலைசிறந்த நிபுணர்கள் குழு, அணையில் 13 கட்ட ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்பே, 142 அடி தண்ணீர் தேக்கி கொள்ள தீர்ப்பு அளிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் இரண்டு தீர்ப்புகளை வழங்கிய பிறகும், கேரள மாநில அரசு பிரச்னையை கிளப்பி வருகிறது. பெரியாற்றில் புதிய அணை கட்ட சாத்தியமில்லை என்பது கேரள அரசுக்கும் நன்கு தெரியும்.

தற்போது அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்று தமிழக விவசாயிகள் வலியுறுத்தி வரும் வேளையில், கேரளா புதிய அணை என்பதில் பிடிவாதமாக இருப்பது 152 அடிக்கு முட்டுக்கட்டை போடுவதற்காகத்தான். பெரியாறு அணையை இடித்து விட வேண்டும் என்று திட்டம் தீட்டும் கேரளாவின் கனவு ஒருபோதும் பலிக்காது. கேரள அரசின் செயலை கண்டித்து, ராமநாதபுரம், சிவகங்கை மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் உள்ள பெரியாறு பாசன விவசாயிகள் வரும் 27ம் தேதி காலை 10 மணி அளவில் லோயர்கேம்பில் உள்ள பென்னிகுக் மணிமண்டபத்தின் முன்பிருந்து குமுளி நோக்கி பேரணி செல்ல இருக்கிறோம். இவ்வாறு தெரிவித்தார்.

 

The post முல்லை பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்ட திட்டம்: கேரள அரசை கண்டித்து 27ம் தேதி குமுளி நோக்கி விவசாயிகள் பேரணி appeared first on Dinakaran.

Related Stories: