திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் மழையால் அறுவடை நேரத்தில் அழுகும் பன்னீர் திராட்சை: விவசாயிகள் வேதனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செட்டியபட்டி, ஏ.வெள்ளோடு, கலிக்கம்பட்டி, கல்லுப்பட்டி, வேளாங்கண்ணி நகர், ஜாதி கவுண்டன்பட்டி, பெருமாள்கோவில்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் பன்னீர் திராட்சை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது கொடிகளில் பன்னீர் திராட்சை அறுவடை செய்யும் பருவத்தில் இருந்தது. ஆனால், கடந்த 10 நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், திராட்சை பழங்கள் செடியிலேயே வெடித்து அழுகி கீழே விழுகின்றன. இதனால், விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதால் வேதனை அடைந்துள்ளனர். இது குறித்து செட்டியபட்டி திராட்சை விவசாயி சேசுராஜ் மரியசூசை கூறியதாவது: செட்டியபட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தற்போது சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் பன்னீர் திராட்சை பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்தது.

நான் 10 ஏக்கர் பரப்பளவில் திராட்சை சாகுபடி செய்தேன். இந்த ஆண்டு விளைச்சல் நன்றாகவே இருந்தது. ஆனால், தற்போது தொடர்ந்து கோடை மழை பெய்து வருவதால் திராட்டை பழங்கள் செடியிலேயே வெடித்து அழுகி வீணாகின்றன. மேலும் மழை காரணமாக வியாபாரிகளும் திராட்சைகளை வாங்க முன்வருவதில்லை. இதனால், பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ திராட்சை ரூ.40க்கு விற்பனையானது. தற்போது ஒரு கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ஒரு ஏக்கரில் திராட்சை சாகுபடி செய்ய ரூ.2.50 லட்சம் வரை செலவாகிறது. ஆனால், தற்போது ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து பழங்களும் அழுகி வீணாவதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு நிவாரணம் வழங்க வேண்டும்’ என தெரிவித்தார்.

The post திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் மழையால் அறுவடை நேரத்தில் அழுகும் பன்னீர் திராட்சை: விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.

Related Stories: