திருவாடானை அரசு கலைக்கல்லூரி பகுதியில் குப்பை கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திருவாடானை: திருவாடானை அரசு கல்லூரி பகுதியில் குப்பை கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாடானையில் தொண்டி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த அரசுக் கல்லூரியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த கல்லூரியின் நுழைவு வாயில் அருகிலேயே கோழிக்கழிவுகளை கொண்டு வந்து அப்பகுதி கோழிக்கடை வியாபாரிகள் ஒரு சிலர் தினந்தோறும் கொட்டி விட்டு செல்கின்றனர். மேலும் திருவாடானை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தனிநபர் வீடுகளின் கழிப்பறைகளில் மோட்டார் மூலம் சின்டெக்ஸ் டேங்குகளில் அள்ளப்படும் மனிதக் கழிவுகளையும் இந்தக் கல்லூரி வாசலின் அருகிலேயே இரவு நேரங்களில் மர்ம நபர்கள் கொட்டி விட்டு செல்கின்றனர்.

இதனால் அந்தக் கழிவுகள் கொட்டிக் கிடக்கும் இடத்தில் அப்பகுதியில் சுற்றித் திரியும் ஏராளமான பன்றிகள் வந்து இந்தக் கழிவுகளை உண்ணும்போது கலைத்து விடுவதால் ஒரு வித துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் இங்குள்ள பாரதிநகர் பகுதி மக்களுக்கு இந்தக் கோழி கழிவுகளும், மனிதக் கழிவுகளும் கொட்டப்பட்ட இடத்தின் வழியாக தான் சுமார் 1 கி.மீட்டர் தூரமுள்ள சமத்துவ மயானத்திற்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இந்த வழியாக ஏதேனும் பிரேதத்தை தூக்கிச் சென்றால் கூட இந்தக் கோழிக் கழிவுகளின் மீதும், மனிதக்கழிவுகளின் மீதும் மிதித்து விட்டு செல்லும் அவல நிலை உள்ளது. இந்த சூழலில் தற்சமயம் இங்கு கொட்டப்படும் கழிவுகள் மற்றும் மனிதக் கழிவுகளால் இந்த அரசுக் கலைக் கல்லூரிக்கு வரும் மாணவ, மாணவியர்கள் நோய் தொற்று ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சத்துடன் தினசரி இந்த இடத்தை கடந்து விட்டு செல்கின்றனர்.

ஆகையால் இந்த அரசுக் கல்லூரி நுழைவு வாயிலின் அருகில் இந்த கோழிக் கழிவுகள் மற்றும் மனிதக் கழிவுகளை கொட்டாமல் மாற்று இடத்தில் கொட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இங்கு கொட்டப்பட்ட கோழிக்கழிவுகள் மற்றும் மனிதக் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்தி விட்டு அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து நேதாஜி மக்கள் விழிப்புணர்வு சங்கத் தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், ‘‘ இந்தப் பகுதியில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

மேலும் இந்த கல்லூரி நுழைவு வாயிலின் அருகில் இருந்து சுமார் 1 கி.மீட்டர் தூரம் சமத்துவ மயானம் உள்ளது. இந்நிலையில் இந்தக் கல்லூரியின் நுழைவு வாயிலின் அருகில் சமத்துவ மயானத்திற்கு செல்லும் பாதையில் கோழிக்கழிவுகள் மற்றும் மனிதக் கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. ஆகையால் இங்கு கொட்டப்படும் கோழிக் கழிவுகளை மாற்று இடத்தில் கொட்டுவதற்கு ஏதுவாக இடத்தை ஒதுக்கி கொடுத்து விட்டு, இங்கு‍ கொட்டப்பட்ட கோழிக் கழிவுகளையும், மனிதக் கழிவுகளையும் அப்புறப்படுத்தி விட்டு சுகாதார சீர்கேடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கூறினார்.

Related Stories: