‘புலிட்சர்’ விருதை பெறச் சென்ற காஷ்மீர் போட்டோகிராபர் தடுத்து நிறுத்தம்: டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு

புதுடெல்லி: நியூயார்க்கில் புலிட்சர் விருதை பெறச் சென்ற காஷ்மீர் போட்டோகிராபர் டெல்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காஷ்மீர் புகைப்பட பத்திரிகையாளரான சன்னா இர்ஷாத் மட்டூ, சர்வதேச ஊடகங்களில் பணியாற்றி வருகிறார். இவர், கொரோனா காலத்தில்  இந்தியாவில் நடந்த சில சம்பவங்களை கவரேஜ் செய்ததற்காக 2022ம் ஆண்டுக்கான புலிட்சர்  விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த ஜூலை மாதம், பிரான்சில் நடந்த  புத்தக வெளியீட்டு விழா மற்றும் புகைப்படக் கண்காட்சியில் பங்கேற்பதற்காக  டெல்லியில் இருந்து விமானத்தில் செல்ல முயன்றார். அப்போது இந்திய  குடியுரிமை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். இந்நிலையில் நியூயார்க்கில் நடக்கும் புலிட்சர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து விமானத்தில் செல்ல திட்டமிட்ட சன்னா இர்ஷாத் மட்டூ, டெல்லி விமான நிலையத்திற்கு வந்தார். அவரை நியூயார்க் செல்ல குடியுரிமை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

இதுகுறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘புலிட்சர் விருது பெறுவதற்காக நியூயார்க் செல்ல டெல்லி விமான நிலையத்திற்கு வந்தேன். ஆனால், குடியுரிமை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டேன். என்னிடம் அமெரிக்க விசா மற்றும் டிக்கெட் இருந்தும் எனது பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதுதொடர்பாக உயரதிகாரிகளை தொடர்பு கொண்ட போதும், அவர்களிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை’ என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜம்மு மற்றும் காஷ்மீர் காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘சன்னா இர்ஷாத் மட்டூ வெளிநாடு செல்ல ஏன் தடுத்து வைக்கப்பட்டார் என்பது தெரியவில்லை’ என்றனர்.

Related Stories: