வேப்பனஹள்ளி அருகே சங்க காலத்தில் இரும்பு உருக்கியது கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி : வேப்பனஹள்ளி அருகே சங்க காலத்தில் இரும்பு உருக்கும் உலைகள் இருந்ததற்கான எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் வெங்கடேஸ்வரன் மற்றும் முதலாமாண்டு வரலாற்றுத்துறை மாணவர்கள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொல்லியல் கள ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனால், மாணவர்களுக்கு தொல்லியல் குறித்த விழிப்புணர்வு மற்றும் கற்கால தொல்லியல் எச்சங்கள், வரலாற்றுக் கால தொல்லியல் எச்சங்கள் குறித்து நேரடியாக களத்தில் கற்றுக் கொடுத்து, பயிற்சி அளிக்கப்படுகிறது.

அதன்படி, வேப்பனஹள்ளி அருகே நாச்சிக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பண்ணப்பள்ளியில், மாணவர்கள் மேற்கொண்ட கள ஆய்வில் ஊருக்கு வடக்கு புறம் கிருஷ்ணப்பாவிற்கு சொந்தமான விவசாய நிலத்தில், இரும்பு உருக்கும் ஆலைகள் இருந்ததற்கான ஆதாரங்களை கண்டறிந்துள்ளனர். இப்பகுதியில் கனிம உலோகங்களை உருக்க பயன்படும் சுட்ட மண்ணிலான உருக்கு உலை குழாய்கள் சிறிதும், பெரிதுமாக ஏராளமானதாக கிடைத்துள்ளன. அத்துடன் இரும்பு உருக்கிய பிறகு அதில் இருந்து கிடைக்கும் இரும்புக் கழிவுகள், இரும்பை தேவையான வடிவத்தில் கொண்டுவர தேய்ப்பதற்கு பயன்படுத்தப்படும் கற்கள், அக் கால மக்களுக்கு தொடர்புடைய வாழ்விடப் பகுதி, அதில் கிடைத்த கருப்பு, சிகப்பு பானை ஓடுகள் மற்றும் ஊர் நடுவில் உள்ள குத்துக்கல் ஆகியவை கிடைத்துள்ளன. இதுகுறித்து வரலாற்று பேராசிரியர் வெங்கடேஸ்வரன் கூறியதாவது:

வரலாற்றின் தொடக்க காலமான சங்க காலத்தில் வாழ்ந்த மக்களின் காலம் அல்லது ஒரு சமூகம், இரும்பின் பயன்பாட்டை அறியத் துவங்கிய காலம் ஆகும். இக்காலத்தில் மக்கள் இரும்புத் தாதுப்பொருட்களை கண்டறிந்து அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிந்திருந்தனர். இங்கு கண்டறியப்பட்டுள்ள சுடுமண் உருக்கு உலை குழாய்கள், இரும்பை உருக்கும் உலைகளில் இருந்து எளிதில் துருப்பிடிக்காத தூய்மையான இரும்பாக மாற்றம் செய்ய, இந்த உருக்கு உலைகளைப் பயன்படுத்தியுள்ளனர். தற்போது கிடைத்துள்ள சுடுமண் உருக்கு உலை குழாய்களின் ஒரு முனையில் இரும்பின் படிமங்கள் ஒட்டியுள்ளதை காண முடிகிறது.

மேலும், அக்காலத்தில் வாழ்ந்த மக்கள், தொழில் பட்டறைகள் அமைத்து இரும்புத் தாது உருக்குதல், இரும்புத் தாதுவை பிரித்தெடுத்தல், வேட்டையாட பயன்படும் கருவிகள் மற்றும் வேளாண்மைக் கருவிகள் தயாரிக்க இவற்றை பயன்படுத்தியுள்ளனர். இம்மக்கள் இரும்பின் தொழில்நுட்பத்தை அறிந்திருப்பதோடு மட்டுமல்லாமல், ஒரு நாகரிகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல துவங்கி உள்ளனர். இதன் பிறகு வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட சமூகம் உருவாகி உபரி உற்பத்தி, இனக்குழுக்களின் தலைமை, அரசு ஆகியவையும் உருவாகத் துவங்கியது என்பதை தற்போது பல இடங்களில் நடைபெற்று வரும் அகழ்வாய்வுகள் மூலம் தெரிய வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: