பொன்னையன் கருத்துக்கு ஆதரவு வலுத்து வருவதன் எதிரொலி அதிமுக பொதுக்குழு ஜூன் 23ம் தேதி கூடுகிறது: கட்சி தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு; பாஜவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர திட்டம்

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும். கடைசியாக 9.1.2021ம் ஆண்டு அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை, வானகரத்தில் அப்போதைய அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்தது. கொரோனா காரணமாக 2022ம் ஆண்டு மே மாதம் வரை அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் இந்த மாதம் இறுதியில் காலியாக இருந்த 6 மாநிலங்களவைக்கான தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதனால் அதிமுக பொதுக்குழு நடத்தப்படுவது தள்ளி வைக்கப்பட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த திங்கட்கிழமை நடந்த கூட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.பொன்னையன், தமிழக பாஜவை நேரடியாகவே குற்றம் சாட்டி பேசினார். அவர் பேசும்போது, ‘‘தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுகவுக்கு அடுத்தபடியாக அதிக இடங்களை பிடித்து பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுகிறது. ஆனால், ஏதோ ஒரு நூறு பேரை வைத்து போராட்டம் நடத்தினால் தமிழகத்தில் பாஜ பிரதான எதிர்க்கட்சியாக மாற முடியாது.

தமிழகத்தில் எல்லோரும் இந்தியை, சமஸ்கிருதத்தை படிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு வற்புறுத்தி வருகிறது. நீட் தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படி நடத்தப்படுகிறது. இதையெல்லாம் தமிழக பாஜ தலைமை கண்டிக்காமல் தமிழக மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. தற்போது, தமிழக பாஜ, அதிமுக இடத்தை பிடிக்க பார்க்கிறது. இதற்கு நாம் இடம் கொடுத்துவிடக்கூடாது’’ என்று சரமாரியாக பாஜவை குற்றம் சாட்டி அவர் பேசினார். அவரது பேச்சுக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இதனால், கட்சி தலைமை செய்வதறியாது திகைத்து வருகிறது. இப்படியே விட்டால், கட்சியில் இனி பலரும் பாஜவுக்கு எதிராக பேச ஆரம்பிப்பார்கள். அதற்குள், நாம் சுதாரித்துக் கொண்டு பாஜவை கண்டிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இதனால், அதிமுக பொதுக்குழு கூட்டத்தை இந்த மாத இறுதிக்குள் நடத்த முடிவு செய்து, இதற்கான ஏற்பாடுகளை செய்ய, முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளருமான பெஞ்சமினிடம் கட்சி தலைமை கேட்டுக் கொண்டது.

இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 23ம் தேதி (வியாழன்) காலை 10 மணிக்கு சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் பொன்னையன் தமிழக பாஜவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள மூன்றே நாளில் அதிமுக பொதுக்குழு கூடும் தேதியை கட்சி தலைமை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுக்குழு கூடும்போது, தமிழக மக்கள் நல திட்டங்களுக்கு எதிராக செயல்படும் பாஜவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர, கட்சி தலைமையின் செயல்பாடுகள், ஒற்றைத்தலைமை குறித்தும், சசிகலா பிரச்னை குறித்தும் பொதுக்குழுவில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

Related Stories: