தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலாகி, அதிகாரிகள், அரசியல்வாதிகள் மத்தியில் பரபரப்பான தேர்தல் பணிகளும் தீவிர வேகம் கண்டுள்ளன. உலகின் பல்வேறு நாடுகளிலும் வெவ்வேறு வகையில் தேர்தல் முறைகள் மேற்கொள்ளப்பட்டாலும், தேர்தல் நடக்கும் நாளில், வாக்களிக்கப்பட்டதை அறிவிக்கும் வகையில் வாக்காளரின் விரலில் வைத்து அனுப்பும் முக்கிய ஹீரோ இந்த அழியாத அடையாள மை தான். வாக்களித்தவரின் இடது ஆள்காட்டி விரலில் வைக்கும் இதுவே அவர் வாக்களித்ததற்கான அத்தாட்சி. ஒருமுறை வாக்கு செலுத்தியவர் மறுமுறை வாக்களிக்க விடாமல் காக்கிறது. ஜனநாயகம் காப்பதில் இந்த மைதான் நம் தேசத்து காவலன். இந்த மை வைத்தது முதல் குறைந்தது 20 நாட்கள் அழிவதில்லை.
அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக இந்த வாக்காளர் அடையாள அழியாத மையை நம் இந்திய நிறுவனமே தயாரித்துத் தருவதென்பது சிறப்பான செய்தி. கர்நாடகா மாநிலத்தின் மைசூருவில் மைசூர் பெயின்ட்ஸ் அன்ட் வார்னிஷ் லிமிடெட் (எம்பிவிஎல்) எனும் இந்நிறுவனம் மிக நீண்ட நெடுங்காலம் இயங்கி வருகிறது. 1937ல் மைசூர் மன்னர் நல்வடி கிருஷ்ணராஜ உடையார், இந்நிறுவனத்தை வண்ணத் தயாரிப்பிற்கென துவக்கினார். இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டுடைமையைாக்கப்பட்ட இந்நிறுவனம் 1962ல் நாட்டின் 3வது நாடாளுமன்றத் தேர்தலில் அடையாள மை தயாரிப்பு பணியில் இறங்கியது.
இப்போது வரையிலும் மிகச்சிறப்புடன் இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என்னென்ன பொருட்களின் கலவையில் இந்த அழியாத மை தயாரிக்கப்படுகிறது எனும் ரகசியம் காக்கப்பட்டு வருகிறது. எனினும் இதில் கலந்துள்ள முக்கிய வேதிப்பொருள் வரிசையில் சில்வர் நைட்ரேட் இருக்கிறது. இது இக்கரைசலின் கருமையைக் கூட்டுகிறது. விரலில் இட்டதும் விரலை ஒட்டிய தோலுடன் வினைபுரியும் சில்வர் நைட்ரேட், சில்வர் குளோரைடாகிறது. நீரில் கரையாத் தன்மைக்குரிய இந்த சில்வர் குளோரைடு நெடிய காலம் மை அழியாமல் காத்து, வாக்களித்தவரை அடையாளப்படுத்துகிறது.
இந்த அழியாத மையை 5 மிலி, 7.5 மிலி, 20 மிலி, 80 மிலி, 500 மிலி பாட்டில்களில் அடைத்து தேவைக்கேற்ப நிறுவனத்தினர் வழங்கி வருகின்றனர். முறையாக பயன்படுத்தினால் 5 மிலி அடையாள மை சுமார் 300 வாக்காளர்களை கவர் செய்து விடும் என்கின்றனர். இந்த மையை வெந்நீர், ஆல்கஹால், நெயில் பாலிஸ் ரிமூவர், பிளீச்சிங் என்று எதுகொண்டும் அழிக்க முடியாது. விரலில் மை இடப்பட்ட பகுதியின் விரல் நகத்துடன் கூடிய தோல் பழையதாகி அகன்று, புதிய தோல் வரும் வரையிலும் இந்த மை நின்று நிலைத்திருக்கும். நம் நாட்டில் மட்டுமல்ல… தேர்தலின்போது அடையாள மையை விரலில் வைக்கும் வழக்கம், உலக நாடுகள் பலவற்றிலும் பழக்கத்தில் இருக்கிறது. தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, தென் ஆப்ரிக்கா துவங்கி ஆப்கானிஸ்தான், கம்போடியா வரையிலும் பல்வேறு நாடுகளுக்கும் நம் இந்தியாவிலிருந்தே இந்த பெருமைமிகு அழியாத மை தேர்தல் பயன்பாட்டிற்கென அனுப்பி வைக்கப்படுகிறது.
தலைவர்கள் இன்று…
முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை
எடப்பாடி பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர்) சென்னை
செல்வப்பெருந்தகை (காங்கிரஸ் மாநில தலைவர்) சென்னை
வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்) சென்னை
நயினார் நாகேந்திரன் (பாஜ தலைவர்) மதுரை
பெ.சண்முகம் (சி.பி.எம்.மாநில செயலாளர்) சென்னை
மு.வீரபாண்டியன் (சி.பி.ஐ.மாநில செயலாளர்) சென்னை
திருமாவளவன் (வி.சி.க தலைவர்) சென்னை
பிரேமலதா (தேமுதிக பொதுச்செயலாளர்) சென்னை
அன்புமணி (பாமக தலைவர்) கடலூர்
ஜி.கே.வாசன்(தமாகா தலைவர்) ஈரோடு
சீமான்(நாதக ஒருங்கிணைப்பாளர்) சென்னை
டி.டி.வி.தினகரன்(அமமுக பொதுச்செயலாளர்) சென்னை
விஜய் (தவெக தலைவர்) பனையூர்.
