இந்து மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் கணபதி ரவி வெளியிட்டுள்ள அறிக்கை: ‘‘தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து இந்து மக்கள் கட்சியின் சார்பில் சென்னை பூரண சந்திரன் திடலில் நேற்று முன்தினம் (மார்ச் 15) மாநாடு நடைபெற்றது. இதில் பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அதிமுக முன்னணி தலைவர்கள் கலந்து கொள்வதாக கூறியிருந்தனர். ஆனால் இந்த மாநாட்டில் அவர்கள் யாரும் பங்கேற்காமல், அதிமுக நடத்திய ரம்ஜான் நோன்பு திறப்பு விழாவில் பங்கேற்றது எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது.
ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் ஓட்டுக்களும் திமுக கூட்டணிக்கு கிடைக்கும் என்கிற நிலை இருக்கிறது. கடந்த காலங்களில் அதிமுக இஸ்லாமிய அமைப்புகளுடன் கூட்டணி வைத்தும் பெருவாரியான இஸ்லாமிய ஓட்டுக்கள் திமுக கூட்டணிக்கு கிடைத்தது. தமிழகம் முழுக்க இந்து ஓட்டு வங்கியை உருவாக்கி அதிமுக, பாஜ கூட்டணியை வெற்றி பெறச் செய்வதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
அதற்காக நடத்திய மாநாட்டில் இவர்கள் பங்கேற்காமல் தவிர்த்தது, இமக தொண்டர்களை வேதனை அடையச் செய்துள்ளது. ரம்ஜான் நோன்பு போன்ற நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொள்வதன் மூலம் இஸ்லாமிய ஓட்டு வங்கியை கைப்பற்றி விடலாம் என்கிற எண்ணத்தை தேஜ கூட்டணி தலைவர்கள் கைவிட வேண்டும். இந்து சமய அமைப்புகளையும் அரவணைத்து செல்லும்படி வேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
