கேரளாவில் பாஜ முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு: ஒன்றிய அமைச்சர், மாஜி பெண் டிஜிபி, சினிமா டைரக்டர் போட்டி

 

கேரளாவில் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இடதுசாரி கூட்டணியில் சிபிஎம் 86 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 81 வேட்பாளர்கள் பெயர்கள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. கேரள முதல்வர் பினராயி விஜயன் தர்மடம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

இந்தக் கட்சியில் கடந்த முறை வெற்றி பெற்ற 56 எம்எல்ஏக்கள் மீண்டும் போட்டியிடுகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 25 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர். இந்த இரு கட்சியிலும் சேர்த்து தற்போது அமைச்சராக உள்ள 14 பேர் மீண்டும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் பாஜவின் முதல் வேட்பாளர் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது.

கேரளாவில் மொத்தமுள்ள 140 சட்டப்பேரவை தொகுதிகளில் பாஜ 90 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மற்ற 50 தொகுதிகள் பிடிஜேஎஸ், டுவென்டி டுவென்டி உள்பட கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 47 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாஜ நேற்று வெளியிட்டது. இதன்படி மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர் நேமத்திலும், ஒன்றிய இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் காஞ்சிரப்பள்ளியிலும் போட்டியிடுகின்றனர்.

கேரள முன்னாள் முதல்வர் கருணாகரனின் மகள் பத்மஜா வேணுகோபால் திருச்சூரிலும், முன்னாள் டிஜிபியும், திருவனந்தபுரம் மாநகராட்சி கவுன்சிலருமான ஸ்ரீ லேகா வட்டியூர்க்காவிலும், முன்னாள் ஒன்றிய இணையமைச்சர் வி.முரளீதரன் கழக்கூட்டத்திலும், மலையாள சினிமா டைரக்டர் மேஜர் ரவி ஒற்றப்பாலத்திலும் போட்டியிடுகின்றனர். பாஜவின் அடுத்த வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் முக்கிய கட்சிகளான சிபிஎம், சிபிஐ மற்றும் பாஜ வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியில் இதுவரை வேட்பாளர்களை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Stories: