மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி ஓட்டு: பீகாரில் 5 இடங்களையும் வென்றது பா.ஜ கூட்டணி: ஒடிசாவில் ஒரு இடத்தில் சுயேட்சை வெற்றி: அரியானாவில் முடிவு அறிவிப்பில் தாமதம்

 

புதுடெல்லி: மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி ஓட்டு போட்ட எம்எல்ஏக்களால் பீகாரில் 5 இடங்களையும் பா.ஜ கூட்டணி வென்றது. ஒடிசாவில் ஒரு இடத்தில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றார். மாநிலங்களவை எம்பி பதவிக்கான தேர்தலில் பீகார், அரியானா, ஒடிசா மாநிலங்களில் போட்டி ஏற்பட்டதால் அங்கு நேற்று தேர்தல் நடந்தது. பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 5 இடங்களில் முதல்வர் நிதிஷ்குமார், பா.ஜ தேசிய தலைவர் நிதின்நபின் , ஒன்றிய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் ராம்நாத் தாக்கூர், ராஷ்டிரிய லோக் மோர்ச்சா தலைவரும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான உபேந்திர குஷ்வாஹா, பாஜகவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவேஷ் குமார் ஆகியோர் நிறுத்தப்பட்டனர்.

இந்த தேர்தலில் நேற்று நடந்த ஓட்டுப்பதிவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுரேந்திர பிரசாத் குஷ்வாஹா (வால்மீகி நகர்), மனோஜ் பிஸ்வாஸ் (போர்பஸ்கஞ்ச்), மனோகர் பிரசாத் சிங் (மனிஹாரி), தாக்கா தொகுதியைச் சேர்ந்த ராஷ்ட்ரீய ஜனதாதளம் எம்எல்ஏ பைசல் ரஹ்மான் ஆகியோர் ஓட்டுப்போட வராததால், ராஷ்ட்ரீய ஜனதாதளம் வேட்பாளரும் பிரபல தொழிலதிபருமான அமரேந்திர தாரி சிங் தோல்வி அடைந்தார். பாஜ கூட்டணியில் 202 சட்டமன்ற உறுப்பினர்களும் ஓட்டு போட்டனர். இந்தியா கூட்டணியில் 41 சட்டமன்ற உறுப்பினர்களில் 37 பேர் மட்டுமே வாக்குப் பதிவு செய்தனர்.

இதனால் பீகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில்,’ எங்கள் அணி எம்.எல்.ஏ-க்கள் கட்சிக்குத் துரோகம் இழைத்திருக்காவிட்டால், தேர்தல் முடிவு வேறுவிதமாக அமைந்திருக்கும். வாக்கெடுப்பில் பங்கேற்கச் சில சட்டமன்ற உறுப்பினர்கள் வராததற்கான காரணங்கள் பின்னர் ஆராயப்படும். பாஜ விற்கு எதிரான தனது அரசியல் போராட்டத்தை நாங்கள் தொடர்ந்து முன்னெடுத்து செல்வோம்’ என்றார்.

ஒடிசா:ஒடிசாவில் 4 இடங்களுக்கு நடந்த தேர்தலில் 2 இடங்களில் பா.ஜ, ஒரு இடத்தில் பிஜூ ஜனதாதளம், இன்னொரு இடத்தில் பா.ஜ ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான திலீப்ரே வெற்றி பெற்றார். பா.ஜ சார்பில் ஒடிசா மூத்த பா.ஜ தலைவர் மன்மோகன் சமல், சுஜீத் குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

பிஜூ ஜனதாதளம் சார்பில் சான்ட்ரப்ட் மிஸ்ரா வெற்றி பெற்றார். 4வது இடத்துக்கு போட்டி போட்ட முன்னாள் ஒன்றிய அமைச்சர் திலீப் ரேவுக்கு 8 பிஜேடி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி வாக்களித்தனர். இதனால் அவர் வெற்றி பெற்றார்.

அரியானா: அரியானாவில் 2 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடந்தது. இதில் பா.ஜவின் சஞ்சய் பாட்டியா, காங்கிரஸ் கட்சியின் கரம்வீர் சிங் பௌத் மற்றும் பாஜ ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் சதீஷ் நந்தல் ஆகியோர் போட்டியிட்டனர். மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட ஒவ்வொரு வேட்பாளருக்கும் 31 வாக்குகள் தேவைப்படுகின்றன. 90 உறுப்பினர்கள் கொண்ட அரியானா சட்டப்பேரவையில் பா.ஜவுக்கு 48 எம்எல்ஏக்கள், இந்திய தேசிய லோக் தளத்திற்கு 2, சுயேட்சைகள் 3 பேர் உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 37 எம்எல்ஏக்கள் உள்ளதால் நிச்சயம் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அங்கு தேர்தல் முடிவு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. காங்கிரஸ் வேட்பாளர் கரம்வீர் சிங் பௌத் எளிதாக வெற்றி பெறுவார் என்பதால் அந்த பெற்றியை பா.ஜ தாமதப்படுத்துவதாக அரியானா மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கீதா புக்கல் தெரிவித்தார்.

Related Stories: