அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவி லீமா ரோஸ் அதிமுகவில் இணைந்தார். தொடர்ந்து, அவர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேலையில் இறங்கியுள்ளார். அதிமுகவும் அவருக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டி விட்டது. இதையடுத்து, திருவாடனை மற்றும் லால்குடி உள்ளிட்ட 2தொகுதிகளை குறி வைத்து காய் நகர்த்தி வருகிறார். இதில், லால்குடியில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என அவருடைய ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவரது ஆதரவாளர்கள் கூறுகையில்,‘‘ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தொகுதியில் போட்டியிடுவதற்கான வேலையில் லீமா ரோஸ் இறங்கினார். ஆனால், திருவாடனை தொகுதியில் முக்குலத்தோர் வாக்கு வங்கி கணிசமாக உள்ளது. மேலும், அதிமுகவுக்கு எதிராக ஓபிஎஸ் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். மேலும், திருவாடானை தொகுதியில் எப்படியாவது சீட் பெற்றுவிட வேண்டும் என்பதில் அதிமுக மாவட்டச் செயலாளர் முனியசாமி கடுமையான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
தனக்கு வாய்ப்பில்லாதபோது ஏற்கனவே முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வாய்ப்பு இழந்த தனது மனைவி கீர்த்திகா முனியசாமிக்கு இம்முறை சீட் வழங்க வேண்டும் என தலைமையிடம் முறையிட்டு வருகிறார். இவரோடு ஏற்கனவே திருவாடானை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை மட்டுமே சந்தித்துள்ள ஆனிமுத்துவும், இந்த முறை எப்படியாவது தொகுதியை கைப்பற்றி வெற்றியை வசமாக்க வேண்டுமென்பதற்காக சீட் பெறும் முயற்சியில் தீவிரமாக உள்ளார்.
இவர்களோடு, எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் மதிவாணன், மண்டபம் ரத்தினம், ஒன்றிய செயலாளர் ராமநாதன் உள்ளிட்டோரும் தங்களுக்காக திருவாடானையில் சீட் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் லீமா ரோஸ் திருவாடனை தொகுதியை தவிர்த்துள்ளார். அதைபோல், திருச்சி மாவட்டம் லால்குடியில் களம் காணவும் முடிவு செய்துள்ளார். இந்த 2 தொகுதிகளில் ரகசிய சர்வே எடுக்கப்பட்டது. இதில், லால்குடியில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், குறிப்பிட்ட சமூகத்தின் வாக்கு வங்கி (கிறிஸ்டியன் உடையார்) லால்குடி பகுதியில் அதிகமாக உள்ளது.
இந்த சமூகத்தின் வாக்கு நமக்கு சாதமாக இருக்கும் என லீமாரோஸ் கணக்கு போட்டுள்ளார். இந்த வாக்கு வங்கிகளை குறி வைத்து தீவிரமாக வேலை நடந்து வருகிறது. அதிமுக தலைமையும், லீமாரோஸ் கேட்கும் தொகுதியை கொடுத்து விடும் என்பதால், தொகுதி பிரச்னை அவருக்கு அறவே இருக்காது. எனவேதான் லால்குடி தொகுதியை ‘குறி’ வைத்து லீமா ரோஸ் காய்நகர்த்தி வருகிறார். லால்குடி தொகுதியை தங்களுக்கு வேண்டும் என அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினரும் கேட்டு வருகின்றனர். இதனால் யாருக்கு சீட் கொடுப்பது என்பது தெரியாமல் அதிமுக தலைமை திண்டாடி வருகிறது. இதில், லீமா ரோஸ் கை ஓங்குவதற்கு வாய்ப்பு உள்ளது’’ என்றனர்.
லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களம் காண இருக்கும் லீமாரோஸ், தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் என்பது குறிப்பிடத்தக்கது.
*அரசியல் லாபத்துக்காக கட்சிகளை விழுங்கும்: பாஜ வலையில் சிக்கிட்டார் விஜய்; பீல் பண்ணும் சண்முகம்
திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் இரவு நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டத்தில் மாநில செயலாளர் சண்முகம் கலந்துகொண்டார். அப்போது அவர் அளித்த பேட்டி: அரசியல் அனுபவம் இல்லாத காரணத்தால், கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொரிந்துகொள்வது போல சிபிஐ விசாரணை கேட்டு பாஜவிடம் விஜய் சிக்கிக்கொண்டிருக்கிறார். அவரை மிரட்டி, அச்சுறுத்தி கூட்டணிக்கு வரவைக்க பாஜ முயற்சிக்கிறது. எந்த பக்கம் செல்வது என புரியாமல் குழப்ப மனநிலையில் விஜய் இருக்கிறார்.
கரூர் சம்பவத்தில் தமிழ்நாடு அரசு முறையாக விசாரணை மேற்கொண்டது. ஆனாலும், சிபிஐ வானத்தில் இருந்து வந்ததை போல நினைத்துக்கொண்டு, எந்த புரிதலும் இல்லாமல் விஜய் அவராகவே போய் சிக்கிக்கொண்டிருக்கிறார். தன்னுடைய அரசியல் சுயலாபத்திற்காக பல கட்சிகளை விழுங்கி, அவை இல்லாமல் செய்கின்ற நடவடிக்கைகளில் பாஜ இந்தியாவில் பல மாநிலங்களில் ஈடுபட்டிருக்கிறது. பெரிய கட்சிகளை தங்கள் சொல்படி ஆடுகிற பொம்மையாக வைத்துக் கொள்வது, இல்லாவிட்டால் அந்த கட்சியை இல்லாமல் செய்து விடுவது என்பதுதான் பாஜவின் வழக்கம்.
பாஜவின் வலையில் இன்றைக்கு விஜய் சிக்கி உள்ளார். வலையில் சிக்கி அவர்கள் வாயில் விழப்போகிறாரா அல்லது வலையில் இருந்து தப்பி வெளியே வரப்போகிறாரா என்பது சில நாட்களில் தெரியும். அவருக்கு வேறு விதமான நிர்பந்தத்தை பாஜ கொடுக்கும். ஆனால், அதை எதிர்கொள்ளும் தைரியம் மிக்கவராக விஜய் இப்போது இல்லை. பாஜ கூட்டணியில் விஜய் இணைந்தால், அது மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்குதான் சாதகமாக அமையும். மேலும் அதிகமான வாக்குகளில் திமுக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
