கூஜா தூக்கும் குஷ்பு: போர் வரும்ன்னு டிரம்ப் சொல்லல… அதனால சிலிண்டர்களை சேமிக்கல…

தமிழக பாஜ துணைத்தலைவர் நடிகை குஷ்பு, நேற்று சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி: நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை தான் முடிவு செய்ய வேண்டும். நாங்கள் தனிப்பட்ட முறையில் முடிவு எடுக்கக் கூடாது. தனிப்பட்ட முறையில், நான் போட்டியிட வேண்டும் என்ற குறிக்கோள் எனக்கு கிடையாது. நான் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பம் மனு எதுவும் கொடுக்கவில்லை. கூட்டணியில் எத்தனை தொகுதிகள்? பாஜவுக்கு எந்தெந்த தொகுதிகள்? என்பது பற்றி இன்னும் முடிவாகவில்லை. அதுகுறித்து யாருக்கும் தெரியவில்லை. எனவே நான் விருப்பம் மனு கொடுக்கவில்லை. விஜய் சிபிஐ விசாரணையில் ஆஜராகி விட்டு வந்தது குறித்து, அவரை தான் நீங்கள் கேட்க வேண்டும். என்னை ஏன் கேட்கிறீர்கள்? எல்பிஜி காஸ் பிரச்னை இந்தியாவில் மட்டுமல்ல. உலகம் முழுவதும் இருக்கிறது. மூன்று மாதங்களுக்கு தேவையான சிலிண்டர்கள் சேமித்து வைக்க வேண்டும் என்றும், போர் வரப்போகிறது என்றும் டிரம்ப் முன்னதாக தகவல் எதுவும் கொடுக்கவில்லை. எனவே, சிலிண்டர்களை சேமித்து வைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

* புதுச்சேரியில் வேட்பு மனுத்தாக்கல் துவங்கியது: முதல்நாளில் ஒருவரும் ஆர்வம் காட்டவில்லை
புதுச்சேரியில் ஏப்ரல் 9ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளுக்கு 17 இடங்களில் வேட்பு மனு தாக்கல் நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று வேட்புமனுக்களை தாக்கல் செய்ய ஒருவர் கூட ஆர்வம் காட்டவில்லை. அதே சமயம் சுயேட்சையாக போட்டியிட விரும்புவர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் வேட்பு மனுக்கான படிவங்களை வாங்கி சென்றனர். இதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்பிக்கவுள்ளனர். தேஜ மற்றும் இந்தியா கூட்டணிகள் தங்களது தொகுதி பங்கீடு இறுதி செய்யவில்லை. அவர்கள் தொகுதிகளை இறுதி செய்தவுடன், வேட்பாளர்களை அறிவிப்பார்கள். வரும் 18ம் தேதி அமாவாசை என்பதால் வளர்பிறை துவங்குகிறது. அன்றிலிருந்து பிரதான கட்சிகளின் வேட்புமனுத்தாக்கல் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறைவு நாளான 23ம் தேதி கிருத்திகை என்பதால் முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் அன்றைய தினம் மனுக்களை தாக்கல் செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 24ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. பின்னர், 26ம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம். அன்றே தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, சின்னங்கள் ஒதுக்கப்படும். இதையடுத்து முக்கிய கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்கும்,

* 5 ஓட்டுக்கு ஒரு பூத்து: இந்திய அளவில் டிரண்டான ‘வருசநாடு’
இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் தலைநகர் டெல்லியில் நேற்று முன்தினம் 5 மாநில தேர்தல் தேதிகளை அறிவித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, ‘‘தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் வருசநாடு அருகே வெள்ளிமலை பகுதியில் 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயக திருவிழாவின் ஒரு மகுடம்’’ என்றார். இதனால் இந்த வாக்குச்சாவடி குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் ஹாட் டாப்பிக்காக வைரலாகி வருகிறது. தேனி மாவட்டம், வருசநாடு அருகே அடர்ந்த வனப்பகுதியில் இந்த வெள்ளிமலை எஸ்டேட் மலைக்கிராமம் அமைந்துள்ளது. இங்கு தனியார் எஸ்டேட் ஒன்று இருக்கிறது. ஒரு காலத்தில் இந்த எஸ்டேட் குடியிருப்புகளில் தங்கி வேலை செய்த தொழிலாளர்கள் எண்ணிக்கை தற்போது மிகவும் குறைந்தது.

எஸ்.ஐ.ஆர் பணிக்கு பின்பு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், வெள்ளிமலை எஸ்டேட்டில் செந்தில், ஜெயராணி, பவுல், சுதா, ரோகித் ஆகிய 5 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். வெள்ளிமலை எஸ்டேட், அடர்ந்த வனப்பகுதியில் இருப்பதால் அங்கு வாகனங்களில் செல்ல முடியாது. இருப்பினும் ஒரு வாக்கு கூட வீணாகக் கூடாது என்ற உயரிய நோக்கத்தில் வெள்ளிமலையில் 5 வாக்காளர்களுக்காக தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடியை அமைத்துள்ளது. அங்குள்ள தொடக்கப்பள்ளி கட்டிடத்தில் தேர்தலுக்கான அனைத்து வசதிகளும் செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே 1980 மற்றும் 1990ம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள காலங்களில் வெள்ளிமலை மலைப்பகுதியில் வாக்காளர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். கடந்த தேர்தலின்போது 37 பேர் மட்டுமே இருந்தனர். தற்போது அதுவும் குறைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: