புதுச்சேரி தேஜ கூட்டணியில் குழப்பம்

 

புதுச்சேரி மாநிலம், ஏனாம் பிராந்தியத்துக்கு சென்ற முதல்வர் ரங்கசாமி, பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார். அப்போது பேசிய அவர், ‘‘ஏனாம் வளர்ச்சிக்கு யார் வெற்றிபெற்றால் நல்லது என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். அனைத்து நலத்திட்டங்களையும் நிறைவேற்ற மல்லாடி மீண்டும் மலர என்ஆர் காங்கிரசுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்’’ என்றார். அப்போது அங்கிருந்த தொண்டர்களும் முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆதரவாளர்களும், முதல்வர் ரங்கசாமியிடம், வரும் சட்டசபை தேர்தலில் பாஜவுக்குத்தான் சீட் என்று கூறி வருகின்றனர். உண்மையில் ஏனாம் தொகுதியில் யாருக்கு சீட்டு என, கேட்டனர்.

இதை கேட்டதும் கோபமடைந்த முதல்வர் ரங்கசாமி, மேடையிலேயே என்ஆர்காங்., கட்சியின் முதல் வேட்பாளர் மல்லாடி கிருஷ்ணாராவ்தான் என அறிவித்தார். வரும் சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்தான் ஏனாம் தொகுதியில் போட்டியிடும். இதில், யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என்றார். மல்லாடி கிருஷ்ணாராவ், கடந்த முறை முதல்வர் ரங்கசாமி போட்டியிடும் வகையில், தொகுதியை விட்டு கொடுத்திருந்தார். ஆனால் அந்த தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் கொல்லப்பள்ளி ஸ்ரீ நிவாஸ் அசோக் வெற்றிபெற்றார்.

பின்னர் அவர் பாஜவுக்கு தனது ஆதரவை அளித்து வந்தார். இந்த முறை ஏனாம் தொகுதியில் பாஜ சார்பில் நேரடியாக களமிறங்க கொல்லப்பள்ளி சீனிவாச அசோக், மீண்டும் பாஜ தலைமையிடம் சீட்டு கேட்டு வருகிறார். அதேபோல் இன்னமும் பாஜ, என்ஆர் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் எவை என்று முடிவாகாத நிலையில், முதல்வர் ரங்கசாமி, அதிரடியாக ஏனாமில் என்ஆர் காங்., மீண்டும் போட்டியிடும் என கூறியிருப்பது புதுச்சேரி தேஜ கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: