அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை வாக்குப்பதிவு ஆவண தரவுகளில் முரண்பாடுகள் ஏற்படாத வகையில் உரிய சீர்திருத்தங்களை செய்ய வேண்டும்: தலைவர்களின் சிலைகளை துணிகளால் மூடக்கூடாது பிரதிநிதிகள் வலியுறுத்தல்

சென்னை: தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை மேற்கொண்டார். தேர்தல் ஆணையம் வழங்கும் வாக்குப்பதிவு ஆவண படிவத்தில் உள்ள தரவுகளில் முரண்பாடுகள் ஏற்படாத வகையில், உரிய சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், ​தேர்தல் நேரங்களில் தலைவர்களின் சிலைகளை துணிகளால் மூடக்கூடாது என கட்சி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ​சென்னை தலைமை செயலகத்தில் தமிழகத்தில் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இதில் தேர்தல் காலத்தில் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அரசியல் கட்சிகளுடன் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தேர்தல் பிரசாரத்தின் போது பயன்படுத்தப்படும் பதாகைகள், சுவரொட்டிகள், விளம்பர வாகனங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்தும் விதிமுறைகள், சமூக வலைதளங்கள் மூலம் நடைபெறும் அரசியல் பிரசாரங்கள், ஆன்லைன் விளம்பரங்கள் மற்றும் தேர்தல் தொடர்பான தகவல் பரவல் போன்றவை கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் பங்கேற்க திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ, கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, நாம் தமிழர் மற்றும் ஆம்ஆத்மி உள்ளிட்ட 6 தேசிய கட்சிகள் என 12 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ (திமுக), ஜெயக்குமார், இன்பதுரை (அதிமுக), தங்கபாலு, ராம்மோகன் (காங்கிரஸ்), கராத்தே தியாகராஜன் (பாஜ), ரவிக்குமார், குணவழகன் (விசிக), பெரியசாமி, ரவீந்திரநாத், சண்முகம், ஆறுமுகநயினார் (மார்க்சிஸ்ட்), நல்லதம்பி, ஜனார்த்தனன் (தேமுதிக), செந்தில் குமார், கிருஷ்ணன் (நாம் தமிழர்), ஆனந்தன் (பகுஜன் சமாஜ் கட்சி), ஜோசப்ராஜா, வசீகரன் (ஆம்ஆத்மி), சீனிவாசன், அசோக்சாமி (தேசிய மக்கள் கட்சி) உள்ளிட்ட அனைத்துக்கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில், தேர்தல் செலவு கணக்குகள் பராமரிப்பு, வாக்காளர்களை கவரும் வகையில் பரிசுகள் வழங்குவது, பணம் அல்லது பொருட்கள் விநியோகம் செய்வது போன்ற சட்டவிரோத செயல்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் எனவும், தேர்தல் காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை பாதிக்கப்படாத வகையில் அரசியல் கட்சிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கூட்டத்திற்கு பிறகு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது: தேர்தல் ஆணையம் வழங்கும் 17சி படிவத்தில் உள்ள தரவுகளுக்கும், பின்னர் வெளியாகும் தகவல்களுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்படாத வகையில், அதில் உரிய சீர்திருத்தங்களை செய்ய வேண்டும். ​தேர்தல் நேரங்களில் தலைவர்களின் சிலைகளை துணிகளால் மூடக்கூடாது. ​குறிப்பாக, வரும் ஏப்ரல் 14ம் தேதி அம்பேத்கரின் பிறந்தநாள் வருவதால், அவரின் சிலை மற்றும் எம்.ஜி.ஆர். போன்ற மறைந்த தலைவர்களின் சிலைகளை மூடக்கூடாது. இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், இதுகுறித்து உரிய உத்தரவு பிறப்பிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

ஜெயக்குமார் (அதிமுக): பொதுவாக வாக்காளர் பட்டியலில் மாறுபாடுகள் என்று சொல்லும்போது, ஒரு இறுதி வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. தேர்தல் நடப்பதற்கு முன்பாக, அதாவது 10 நாட்களுக்கு முன் வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம் என்று நடைமுறை இருக்கிறது. அப்படி சேர்க்கப்படும் வாக்காளர் பட்டியல், சப்ளிமென்டரி பட்டியலாக வழங்கப்படும். அந்த பட்டியலை தவறாமல் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டும். காரணம், கடந்த பாராளுமன்ற தேர்தலில் குளறுபடிகள் இருந்தது. அரசியல் கட்சிகளிடம் ஒரு லிஸ்ட், தேர்தல் அதிகாரிகளிடம் ஒரு லிஸ்ட் இருந்தது. அதனால் பலரும் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறை நடைமுறைக்கு வந்துவிட்டாலே பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். பொதுவாக தலைவர்கள் சிலைகளை மூடக்கூடாது. அதுபற்றி நடவடிக்கை எடுப்பதற்காக கூறினார்கள்.

தங்கபாலு (காங்கிரஸ்): வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் செலவினக் கணக்குகளை அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் நாளிலிருந்து மட்டுமே கணக்கிட வேண்டும். தற்போதுள்ள நடைமுறைப்படி, வேட்பாளர்கள் தொடர்ச்சியாக 3 முதல் 7 நாட்கள் வரை தேர்தல் அதிகாரிகளைச் சந்தித்து கணக்குகளை ஒப்படைக்க வேண்டும் என்று கூறப்படுவது நடைமுறைக்கு சாத்தியமற்றது. வேட்பாளர்கள் மக்களை சந்திக்கவும், பிரசாரம் செய்யவும் குறைந்த நாட்களே இருப்பதால், கணக்கு தாக்கல் செய்ய ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும். ​வேட்பாளரே நேரடியாகச் செல்வதற்குப் பதிலாக, வேட்பாளர் அல்லது அவரது தேர்தல் ஏஜென்ட் அதிகாரிகளை சந்தித்து செலவு விவரங்களை சமர்ப்பிக்க அனுமதி வழங்கப்பட வேண்டும். ​

கராத்தே தியாகராஜன் (பாஜ): தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் சிறப்புப் படைகளில் உள்ள வீடியோகிராபர்கள், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியைச் சார்ந்த நிறுவனத்தை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இவர்கள் முறையாகப் பதிவு செய்வதில்லை என்பதால், இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. தனிநபர் ஒரு வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்பது குறித்து தெளிவான விளக்கம் இல்லை. ஆன்லைன் மூலம் தேர்தல் தொடர்பான அனுமதிகள் பெறுவதில் காவல்துறை தரப்பிலிருந்து 3 முதல் 4 மணி நேரம் வரை தாமதம் ஏற்படுகிறது. நட்சத்திர பேச்சாளர்களுக்கான வாகன அனுமதியின் போது, வண்டி எண் குறிப்பிடாமல் பொதுவான அனுமதி வழங்க வேண்டும். ஒரு வேட்பாளருக்கான தேர்தல் செலவு வரம்பு ரூ.40 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப தினசரி செலவினப் பட்டியலில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

ரவிக்குமார் (விசிக): ​சிலிண்டர் தட்டுப்பாட்டால் ​தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு தடையின்றி உணவு கிடைப்பதை உறுதி செய்ய, ஒன்றிய அரசும் தேர்தல் ஆணையமும் வழிவகை செய்ய வேண்டும். வாக்குப்பதிவு முடிந்தவுடன் வெளியிடப்படும் விவரங்கள், அடுத்த நாள் மாறுபட்டு காணப்படுகின்றன. ​கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது சில தொகுதிகளில் 5% முதல் 6% வரை வித்தியாசம் இருந்தது. 17 சி படிவங்களை முறையாகப் பெற்று, அதன் நகல்களை முகவர்களிடம் வழங்க வேண்டும். தரவுகளில் எந்த மாற்றமும் இருக்கக்கூடாது. ​அரசு அலுவலகங்களில் உள்ள காந்தி, இந்திரா காந்தி, படேல் போன்ற தலைவர்களின் புகைப்படங்கள், நீண்டகாலமாக இருக்கும் கட்சிக் கொடிக்கம்பங்கள் அகற்ற தேவையில்லை. ​கட்சித் தலைவர்கள் தங்கள் வாகனங்களில் கொடிகளைக் கட்டிச் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையையும் நீக்க வேண்டும்.

பெரியசாமி (சிபிஐ): தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிற ஏப்ரல் 23ம் தேதிக்கு முன்னதாக, ஏப்ரல் 20ம் தேதி இரவு மதுக்கடைகளை அடைத்தால் 21, 22, 23 ஆகிய மூன்று நாட்களும் டாஸ்மாக் கடைகளுக்கு ‘டிரை டே’ ஆக அறிவிக்க வேண்டும். அரசியல் கட்சி தங்களுடைய வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பது என்பது தேர்தல் பணிகளில் ஒன்று. அது அரசியல் கட்சிகளின் செலவில் ஏற்றப்பட வேண்டுமே தவிர, வேட்பாளர்கள் கணக்கில் ஏற்றக்கூடாது. ​அதேபோல 17சி படிவம் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அன்றைக்கு எவ்வளவு வாக்குகள் பதிவாகி இருக்கின்றன, தேர்தல் ஆணையத்தினுடைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

செந்தில் குமார் (நாம் தமிழர் கட்சி): தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வேட்புமனு மற்றும் பிரமாணப் பத்திரங்கள் இன்னும் பதிவேற்றப்படவில்லை, அதை உடனடியாகச் பதிவேற்ற வேண்டும். ​நட்சத்திர பேச்சாளர்களுக்கான சான்றிதழ்களைப் பெற்ற பிறகு வாகனங்களில் கொடி கட்டிக்கொள்ள அனுமதி அளிப்பதாக தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள விவசாயி சின்னம் கடந்த முறையைப் போலவே இந்த முறையும் தேர்தல் ஆணையம் வழங்கிய மாதிரிகளில் தெளிவாக இல்லை. ​​இவ்வாறு கட்சி நிர்வாகிகள் கூறினர்.

Related Stories: