அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ஓபிஎஸ் அணியில் இருந்தார். அவர் திமுகவில் இணைந்ததால் வெல்லமண்டி நடராஜன் எடப்பாடி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார். தொடர்ந்து, அவருக்கு அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேலையில் தீவிரமாக இறங்கினார். எந்த தொகுதியில் போட்டியிடுவது என முடிவு எடுக்கவில்லையாம். இதற்கு முக்கிய காரணம், திருச்சியில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள எல்லா தொகுதிகளிலும் அதிமுக- பாஜ கூட்டணி ‘‘படுவீக்காக’’ உள்ளது. இதுகுறித்து அதிமுகவினர் பல்வேறு கட்ட ‘சர்வே’ எடுத்துள்ளனர். அனைத்து சர்வேயிலும் தொடர்ந்து பின்னடைவு வந்துள்ளது. இதனால் திருச்சியே நமக்கு வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறார்களாம்.
இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், ‘‘தற்போது அதிமுகவில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திருச்சி மாநகரில் போட்டியிட வாய்ப்புகள் குறைவு. மாவட்டத்தில் உள்ள தொகுதிகளிலும் கள நிலவரம் பெரும் ஏமாற்றத்தை தருகிறது. இதனால் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது தெரியாமல் உள்ளோம். கூட்டணி கட்சிகளுக்கு திருச்சியை ஒதுக்கலாம் என்ற யோசனையில் அதிமுக தலைமை உள்ளது. தொகுதி பங்கீடு முடிந்த பிறகு சாதகமான தொகுதியில் போட்டியிட வெல்லமண்டி நடராஜன் முடிவு செய்துள்ளார். தலைமையை சமாளிக்க வேறு வழியின்றி ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட அவர் முடிவு செய்துள்ளார். அப்படி போட்டியிட்டாலும், ‘ரிசல்ட்’ என்பது முன்கூட்டியே தெரிந்ததுதான்’’ என்றனர்.
* காங்கிரஸ் முன்னாள் எம்பி போடும்: இங்கி பிங்கி பாங்கி
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் முன்னாள் எம்பி திருநாவுக்கரசர் நேற்று அளித்த பேட்டி: தவெக தலைவர் விஜய், கூட்டணி சேருவாரா என்பது தெரியவில்லை. அவர் கூட்டணி சேர்ந்தால் தான் அப்போதைய நிலை தெரியும். தனித்து போட்டியிட்டால் என்ன நிலை என்பது தேர்தலுக்கு பிறகுதான் தெரியும். ஆனால் தற்போது காங்கிரஸ் – திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது. கூட்டணிக்குள் எந்த குழப்பமும் இல்லை, இனி மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை.
ஏப்ரல் 23ம்தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக-காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது. வலுவாக உள்ளது. உறுதியாக உள்ளது. பிரச்னை ஒன்றுமில்லை. வரும் சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். எனது மகன் ராமச்சந்திரன் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட்டார். அதே தொகுதி மீண்டும் அவருக்கு காங்கிரஸ் ஒதுக்கினால் அங்கு அவர் போட்டியிடுவார். எனக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவாக ஜெயித்து அமைச்சராகும் ஆசை இல்லை… எம்ஜிஆர் ஆட்சியிலும் அமைச்சராக இருந்து விட்டேன்…. வாஜ்பாய் ஆட்சியிலும் அமைச்சராக இருந்துவிட்டேன்… ஒருவேளை போட்டியிட விரும்பினால் ராஜ்யசபா எம்பி அல்லது லோக்சபா எம்பி பதவிக்கு போட்டியிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
* தோட்டத்தில் வானதி ரகசிய மீட்டிங்
கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனவர் வானதி சீனிவாசன். இவர் வரும் சட்டமன்ற தேர்தலில் வடக்கு தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். கடந்த 5 ஆண்டில் தனது தொகுதியில் ஒரு திட்டத்தையும் முழுமையாக செயல்படுத்தவில்லை என கூறி மக்கள் அவர் மீது ஏற்கனவே அதிருப்தியில் உள்ளனர். தற்போது அவர் வடக்கு தொகுதியில் போட்டியிட உள்ளது இந்து முன்னணி, இந்து அமைப்பு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையேயும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. கோவை தெற்கு என்பது இந்து அமைப்புகளின் தியாக பூமி. கொங்கு மண்டலத்தில் இந்து அமைப்புகள் மற்றும் பாஜவின் எழுச்சி தெற்கில் இருந்து தான் துவங்கியது, எனவே, பாஜ தெற்கு தொகுதியை கைவிட கூடாது என போர்க்கொடி தூக்கி உள்ளனர். இது வானதிக்கு தெரியவர அப்செட்டாகி தனது தோட்டத்திற்கு நிர்வாகிகளை வரவழைத்து ரகசிய மீட்டிங் நடத்தி உள்ளார். அவர்களை சமாதானப்படுத்தும் படி பேசி, தனக்கு மீண்டும் ஆதரவு தரும் படி கேட்டு கொண்டுள்ளார். ஆனால் நிர்வாகிகள் அதற்கு ஒத்துழைக்கவில்லை என தெரிகிறது. தெற்கில் போட்டியிட்டாலும் வெற்றி நிச்சயமில்லை. வடக்கிலும் பெயிலியர் ஆகி விடுமோ? என தோல்வி பயத்தில் அவர் ‘மூட் அவுட்’ டில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
* புதுச்சேரியில இப்படியும் ஒரு கூத்து: இலாகா இல்லாத அமைச்சராகவே தேர்தலை சந்திக்கும்
பாஜ எம்எல்ஏபுதுவை காமராஜர் நகர் தொகுதி எம்எல்ஏவான ஜான்குமார், காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜவுக்கு மாறியவர். இவரது மகன் ரிச்சட்ஜான்குமார், நெல்லித்தோப்பு தொகுதியில் எம்எல்ஏவாக இருந்து வருகிறார். பாஜவில் உள்ள 6 எம்எல்ஏக்களில் 2 பேர் தந்தை, மகனாக இருப்பதால் அமைச்சர் பதவி கேட்டு டெல்லி தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வந்தார் ஜான்குமார். இந்நிலையில், பாஜ சார்பில் அமைச்சராக இருந்த சாய் சரவணன் குமாரின் ராஜினாமாவுக்குப் பிறகு, ஜான்குமார் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 25ம் தேதி அமைச்சராகப் பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற 8 மாதங்களுக்கும் மேலாகியும், அவருக்கு எந்த ஒரு இலாகாவும் ஒதுக்கப்படவில்லை. பாஜ தரப்பில் அழுத்தம் கொடுத்தும் முதல்வர் ரங்கசாமி கேட்கவில்லை. சாய். ஜெ.சரவணன்குமார் நீக்கப்பட்டு ஜான்குமார் அமைச்சராக நியமிக்கப்பட்டாலும், நீண்ட காலம் இலாகா இல்லாத அமைச்சராக அவர் காலம் கழித்தது, கூட்டணிக்குள் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவருக்கு இலாகா ஒதுக்காதது குறித்து பாஜ நிர்வாகிகளிடம் ரங்கசாமி பேசும்போது, ‘‘ஆன்மிக பூமியான புதுவையில் லாட்டரி வியாபாரியான மார்ட்டின் மகன் சார்லசை, இங்கு அழைத்து வந்து கட்சியை உருவாக்கி, எம்எல்ஏ அலுவலகத்தில் அன்னதானம், நலத்திட்டங்கள் செய்தது பிடிக்கவில்லை. சார்லசை கூட்டணியில் சேர்க்க வேண்டாம் என கூறி வருகிறேன். ஜான்குமார், தனது தொகுதியை அவருக்கு கொடுத்துவிட்டு முதலியார்பேட்டையில் நிற்க உள்ளாராம். இருவருமே வெற்றி பெற்று விடலாம் என கனவு காண்கிறார்கள்’’ என ஆவேசத்துடன் கூறினாராம். இதனால் முதலியார்பேட்டை தொகுதியில் பாஜ வேட்பாளராக ஜான்குமாருக்கு சீட் கிடைக்குமா? என்பது தெரியவில்லை. அப்படியே சீட் கிடைக்கவில்லை என்றாலும் ஜான்குமார் தனித்து களம் காண உள்ளாராம். தேர்தலை முன்னிட்டு கடந்த 6 மாதத்துக்கு முன்பே அந்த தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரங்கசாமியின் பழிவாங்கும் தன்மையால் புதுச்சேரி அரசியல் வரலாற்றில் இலாகா இல்லாமலே அமைச்சர் பதவியை கழித்தவர் என்ற சாதனையை செய்தவர் என்ற பெயர் ஜான்குமாருக்கு கிடைத்துள்ளது.
