பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று கரூரில் நிருபர்களை சந்தித்தார். அப்போது, நடிகர் விஜய் தலைமையிலான தவெக, அதிமுக-பாஜ கூட்டணியில் இணையுமா என்ற கேள்விக்கு,‘‘ விஜய்யுடன் கூட்டணி தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று மற்றும் நேற்று முன்தினம் சொன்னது போல் அதிகாரப்பூர்வமாக யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
அதோடு முடிந்ததாக தான் நாங்கள் பார்க்கிறோம். தவெக கட்சியில் இன்றைக்கு மீட்டிங் நடந்துள்ளது. இது தொடர்பாக நீங்கள் (நிருபர்கள்) தவெகவிடம் தான் கேட்க வேண்டும். எங்கள் கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் வேட்பாளராக இருக்ககூடியவர் எடப்பாடி சொன்ன கருத்து தான் இறுதி கருத்து. கட்சி என்னை பிரசாரம் செய்ய சொல்லி உள்ளனர். தொடர்ந்து, பிரசாரம் செய்வேன்’’ என்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜயிக்கு 51 சீட் ஒதுக்கப்பட்டுள்ளதாக என்ற கேள்விக்கு,‘‘ எடப்பாடி பழனிசாமி சொல்லியிருக்க கூடிய கருத்து இறுதி கருத்து. எங்கள் கூட்டணியின் தலைவர். மேலும் அதிக இடங்களில் அதிமுக நிற்க உள்ளது. எனவே, எடப்பாடியின் முடிவு தான் கூட்டணியில் உள்ள எல்லோருடைய முடிவு. இதில், தனிப்பட்ட முறையில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. அவர் சொன்னது தான் இறுதி கருத்து. இதில் மாற்றம் இருந்தால் எடப்பாடி சொல்லுவார். இல்லாத ஒரு விஷயத்தை நான் எப்படி பேச முடியும். நேரமும் காலமும் வரும் போது பேசுவும் என்றார்.
* அதிமுகவோடு விஜய் வந்தா அவருக்கு நல்லது: தூண்டில் போடும் ஜெயக்குமார்
சென்னை, தலைமை செயலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: தவெக கூட்டணி பேச்சு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் பலமுறை தெளிவாக கூறி விட்டார். தவெகவுடன் பேச்சுவார்த்தை எதுவும் அதுபோல் நடைபெறவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன். நம்முடைய விஜய் தெரிந்துகொள்ள வேண்டும். அதிமுக தலைமையை ஏற்று, எங்களோடு வந்தால் அவருக்கு வளர்ச்சி. இல்லையென்றால் அவருக்கு இழப்புதான். வளர்ச்சியா, இழப்பா என்று விஜய் முடிவு செய்து கொள்ளட்டும். இவ்வாறு அவர் கூறினார்.
* பூனை நிற்குது… எங்கிட்டு விழுதுன்னு பார்ப்போம்
திண்டுக்கல்லில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் மட்டுமல்லாமல் யார் கருத்து சொன்னாலும் அது பொய்யானது. மக்கள் அதை பொய்யாக்குவார்கள். அதிமுக கூட்டணியை வெற்றி பெற வைப்பார்கள். விஜய் கூட்டணி குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். பூனை இப்ப நிற்கிறது. எங்கிட்டு விழுகிறது என பார்ப்போம்’ என்றார்.
