ஏவுகணைகளும், எறிகுண்டுகளும் பாயும்: எடப்பாடியை சந்தித்த பின் மன்சூர் அலிகான் அதிரடி

நடிகர் மன்சூர்அலிகான் நேற்று சென்னை, பசுமைவழி சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். இதன்மூலம், நடிகர் மன்சூர் அலிகானின் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி இம்முறை அதிமுவுடன் கூட்டணி வைக்க இருப்பதாக தெரிகிறது. பின்னர் மன்சூர் அலிகான் நிருபர்களிடம் கூறியதாவது: எதிர்க்கட்சி தலைவர், வருங்கால முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியிருக்கின்றோம். எங்களுடைய கருத்துகளை அவர் முன் எடுத்து வைத்தோம். பேச்சுவார்த்தை போய்க்கொண்டு இருக்கிறது. எல்லாம் நல்லபடியாக நடக்கும் என நம்புகின்றேன். பிரசாரத்தில் கண்டிப்பாக ஏவுகணைகளும், எறிகுண்டுகளும் பாயும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக பேசியிருக்கின்றோம். விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம்.

இன்னும் எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்றெல்லாம் பேசவில்லை. பேச்சுவார்த்தை முடிந்த பிறகு சொல்கின்றேன். கடந்த முறை தனியாக போட்டியிட்டேன். தற்போது, கூட்டணியில் போட்டியிடலாம் என இருக்கின்றேன். என்ன நடக்கப்போகிறது என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம். இவ்வாறு அவர் கூறினார். சிறுபான்மையினருக்கு எதிரான கட்சியாக பாஜ இருப்பதாக திமுகவினர் சொல்கின்றனர். அப்படி இருக்கையில் அந்த கூட்டணியில் நீங்கள் இணைய இருக்கின்றீர்களே என அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மன்சூர் அலிகான் கூறும்போது, ‘அதெல்லாம் ஒன்றும் பிரச்னையில்லை. யாராக இருந்தாலும் அவரவருக்கு உண்டான உரிமைகள் வந்து சேரும்’ என்றார்.

* நடிகர் ரஜினிகாந்த் குறித்து பேச்சு: ஆதவுக்கு எடப்பாடி கண்டனம்; கூட்டணி வதந்திக்கு முற்றுப்புள்ளி
நடிகர் ரஜினிகாந்த் குறித்து த.வெ.க கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நிர்வாகி அவதூறு கருத்துகளை பேசியதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கூட்டணி வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ்தள பதிவு: தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் சகோதரர் ரஜினிகாந்த் குறித்து த.வெ.க கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நிர்வாகி ஒருவர் (ஆதவ் அர்ஜூனா) அவதூறான கருத்துகளைப் பேசியுள்ளது கண்டனத்திற்குரியது. அரசியலை கடந்து எல்லோராலும் மதிக்கப்படும் திரை ஆளுமை ரஜினிகாந்த், புரட்சித் தலைவரின் அன்பையும், புரட்சித் தலைவி நன்மதிப்பையும் பெற்ற அவரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது ஏற்கதக்கதல்ல. அரசியலுக்கு வருவது எப்படி ஒவ்வொரு தனிமனிதரின் உரிமையோ, அதேபோல் அரசியலுக்கு வராமல் இருப்பதும் அவர்தம் உரிமை. அதற்கான உரிய காரணத்தை அவரே தெரிவித்துவிட்ட பிறகு, அதற்கு மதிப்பளிக்க வேண்டுமே தவிர, அரசியல் நோக்கத்தோடு அதை அணுகி, அவதூறு கருத்துகளைப் பேசுவது என்பது அரசியல் நாகரிகமற்ற செயல். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே, ரஜினி பற்றிய ஆதவ் அர்ஜூனாவின் பேச்சுக்கு பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்திருந்தார். தற்போது எடப்பாடி பழனிசாமியும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுகவுடன் தவெக கூட்டணி சேரும் என்று வதந்தியை சிலர் திட்டமிட்டு கிளப்பி விட்டுள்ள நிலையில், ஆதவுக்கு எடப்பாடியும், நயினாரும் கண்டனம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது, என்டிஏ -தவெக கூட்டணி வதந்திக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிமுகவினர் தெரிவிக்கின்றனர்.

* ஆதவ் மன்னிப்பு கேட்கணும்… நடிகர் விஜய் கண்டிக்கலன்னா ரஜினி ரசிகர்கள் சும்மா இருக்க மாட்டாங்க! நயினார் கடும் எச்சரிக்கை
தவெக தேர்தல் பிரசாரக் குழு மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சமீபத்தில் அக்கட்சியின் கூட்டத்தில் பேசும் போது, “தமிழகத்தில் எம்ஜிஆருக்கு அடுத்து மிகப்பெரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதை முன்வைத்து அரசியல் மாற்றத்தை கொண்டுவர நினைத்தவர் நடிகர் ரஜினிகாந்த். சிஸ்டம் சரியில்லை, அனைத்தையும் மாற்ற வேண்டும் என அவர் அரசியலுக்கு வர நினைத்தபோது, அவரை மிரட்டி அரசியலுக்கு வரவிடாமல் தடுத்தனர்” என பேசியிருந்தார். இது நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆதவ் அர்ஜுனாவின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனும் ஆதவ் அர்ஜுனாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை பரப்பும் ஆதவ் அர்ஜுனாவிற்கு கண்டனம். திரைப்படத் துறையில் 50 ஆண்டுகளாக கோலோச்சிவரும் சிறந்த கலைஞர், உலகளவில் தமிழ்த் திரைப்படத்தின் முகமாகத் திகழ்பவர், தாதா சாகேப் பால்கே விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, பத்ம பூஷண், பத்ம விபூஷண் போன்ற பல முக்கிய விருதுகளைப் பெற்று திரைத்துறையின் இமயத்தை தொட்டவர், சிறந்த ஆன்மிகவாதி எனப் பல பெருமைகளுக்கு சொந்தக்காரர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். மேலும் அனைத்து மூத்த தலைவர்களின் அன்பையும், பிரதமர் மோடியுடைய மரியாதையையும் பெற்றவராக திகழ்பவர். சாதி, மதம், மொழியைக் கடந்து அனைத்து தரப்பட்ட மக்களின் பேரன்பைப் பெற்றவர்.

அத்தகைய சிறந்த பண்பாளர் குறித்து தவெகவைச் சேர்ந்த ஆவர் அர்ஜுனா பொதுவெளியில் தவறாகப் பேசுவது என்றும் ஏற்புடையதல்ல. அதைப் பார்த்துக் கொண்டு சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களும் சும்மா இருக்க மாட்டார்கள். பத்திரிகைகளின் கவனத்தைப் பெறுவதற்காக, தமிழக மக்களின் பேரன்பிற்கு சொந்தக்காரரான ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜுனா பேசியதை அக்கட்சியின் தலைவர் கண்டிப்பதோடு, இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுரையும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தின் ரசிகர்களிடம் ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: