ராஜ்யசபா சீட் கிடைக்காத அதிருப்தியில் பாஜவுக்கு எதிராக பொன்னையன் பேசுவது சரியல்ல: அதிமுக தலைமை விளக்கம் கேட்க வேண்டும்; பாஜ துணை தலைவர் வி.பி.துரைசாமி கண்டனம்

சென்னை:அதிமுக மூத்த தலைவர் பொன்னையன், அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் பாஜவை பற்றி விமர்சித்து பேசினார். இது தமிழக பாஜவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழக பாஜ துணை தலைவர் வி.பி.துரைசாமி சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக மூத்த தலைவர் பொன்னையனின் கருத்து எங்களுக்கு மிகவும் வருத்தத்தை தந்திருக்கிறது. பாஜ 4 எம்எல்ஏக்களை வைத்துக் கொண்டு காவிரி பிரச்னை, முல்லை பெரியாறு பிரச்னை, சட்டம்-ஒழுங்கு பிரச்னை எதுவாக இருந்தாலும் சட்டமன்றத்திலும் சரி, மக்கள் மன்றத்திலும் சரி கட்சி தலைவர் அண்ணாமலை மிக தெளிவாக பேசி வருகிறார். காவிரி பிரச்னையில் கர்நாடகா அரசுக்கு எதிராகவும், முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா அரசுக்கு எதிராகவும் அண்ணாமலை கருத்து கூறியது பொன்னையனுக்கு நினைவில்லையா.

சமீபத்தில் கூட தமிழக நலனுக்காக ரூ.31,500 கோடி அளவிலான புதிய திட்டங்கள் மற்றும் முடிவுற்ற திட்டங்களை செயல்படுத்தும் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இப்படிப்பட்ட ஆட்சியை பற்றி பொன்னையன் கூறிய கருத்து வருந்தத்தக்கது. அதிமுகவில் இருக்கும் சிலர் என்னிடம் கூட பேசினார்கள். பொன்னையனுக்கு ராஜ்யசபா சீட் கிடைக்காததால், அதிருப்தி அடைந்து இதுபோன்ற கருத்துகளை அவர் பேசிவருகிறார். அதிமுகவின் உள்கட்சி விவகாரங்களில் தலையிட எங்களுக்கு நேரமும் இல்லை, இஷ்டமும் இல்லை. ஆனால், ஒன்றிய அரசை பற்றியும், அண்ணாமலை பற்றியும் குறைச்சொல்ல பொன்னையனுக்கு எந்தவித உரிமையும் கிடையாது. இதுகுறித்து அதிமுக தலைமை, பொன்னையனிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்றார்.

Related Stories: