டிட்கோ-அமெரிக்க நிறுவனம் ஒப்பந்தம் தமிழகத்தில் ரூ.141 கோடி முதலீட்டில் விமான இயந்திர ஆராய்ச்சி மையம்

புதுடெல்லி: தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம், விமான இயந்திரம் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனமான ஜிஇ ஏவியேஷன் இணைந்து ₹141 கோடியில் டிட்கோ-ஜிஇ ஏவியேஷன் ஆராய்ச்சி மையம் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. தமிழகத்தில் தற்போது ஏராளமான தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு முயற்சி எடுத்து வருகின்றன. இதனால், தமிழகத்தில் அதிகளவிலான வேலை வாய்ப்பு உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், தமிழகத்தில் புது புது திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் விமான இயந்திர தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் தமிழகத்தில் அமைய உள்ளது.

இதற்காக, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) அமெரிக்காவில் விமான இயந்திரம் தயாரிக்கும் ஜிஇ ஏவியேஷன் நிறுவனத்துடன் இணைந்து ₹141 கோடி முதலீட்டில், விமான இயந்திர தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் அமைக்க ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இது குறித்து டிட்கோ, ஜிஇ ஏவியேஷன் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், `டிட்கோ, ஜிஇ ஏவியேஷன் இணைந்து கூட்டு ஒப்பந்த அடிப்படையில், தமிழ்நாட்டில் ஐந்து ஆண்டுகளில் ₹141.26 கோடியில் விமான இயந்திர தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் அமைக்க உள்ளது. இந்த தொகையை டிட்கோ, ஜிஇ ஏவியேஷன் நிறுவனங்கள் 2 கட்டங்களாக முதலீடு செய்ய உள்ளன. விமான எந்திரங்கள் உள்பட பல்வேறு உதிரி பாகங்களில் தொழில்நுட்ப மேம்பாடு பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும்,’ என்று கூறப்பட்டுள்ளது.  

தமிழ்நாட்டில் இந்த ஆராய்ச்சி மையம் அமைய இருப்பதால், விமான உதிரிபாகங்கள் தயாரிப்பு தொழிலில் தமிழகம் வளர்ச்சி அடைவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் இருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராணுவ தளவாடங்கள், விமான கருவிகள், உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழில் சார்ந்த முதலீடுகள் தமிழ்நாட்டுக்கு கிடைக்க இந்த தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் உதவும் என்று கூறப்படுகிறது.

Related Stories: