நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி: விஜயகாந்த் அதிரடி அறிவிப்பு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அமமுக கூட்டணியில் இடம்பெற்று தேமுதிக தேர்தலை சந்தித்தது. இதில் தேமுதிக போட்டியிட்ட 60 தொகுதியிலும் தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு வாக்கு வங்கி இல்லாத அமமுகவுடன் கூட்டணி அமைத்தது தான் காரணம் என்றும், அமமுகவினர் தேமுதிக வேட்பாளர்களுக்காக தேர்தல் பணியாற்றவில்லை என்றும் அப்போது தேமுதிக தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் தவறான கூட்டணியால்தான் தேமுதிக வெற்றிவாய்ப்பை இழந்ததாக தொண்டர்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் தேமுதிக தனித்து போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும். தேமுதிக சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளும், தொண்டர்களும் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை டிசம்பர் 1ம் தேதி (நாளை) முதல் 7ம் தேதி வரை அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகத்தில் பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிகவின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், தேமுதிகவின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: