பிஎன்பி பாரிபா ஓபன்: மூட்டை கட்டிய முன்னணி வீராங்கனைகள்.! பிளிஸ்கோவா, பியான்காவும் வெளியேறினர்

இண்டியன் வெல்ஸ்: பிஎன்பி பாரிபா ஓபன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீராங்கனைகள் அடுத்தடுத்து அதிர்ச்சி தோல்வி கண்டு  வெளியேறுவது தொடர்கதையாகி உள்ளது. பெலராஸ் வீராங்கனை  அலெக்சாண்டரா சாஸ்னோவிச் (100வது ரேங்க்), தரவரிசையில் தன்னை விட முன்னிலையில் இருக்கும் ஒசாரியோ செர்ரனோ (71வது ரேங்க், கொலம்பியா), யுஎஸ் ஓபன் சாம்பியன் எம்மா ரடுகானு (22வது ரேங்க், இங்கிலாந்து), முன்னாள் நம்பர் 1 சிமோனா ஹாலெப் (17வது ரேங்க், ருமேனியா)  ஆகியோரை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு  முன்னேறினார். இந்நிலையில்,  தரவரிசையில் தன்னை விட பின்தங்கியிருக்கும் வீராங்கனைகளிடம் முன்னணி வீராங்கனைகள் தோற்று  மூட்டை கட்டுவது  நேற்றும் தொடர்கதையானது. தொடரின் முதல்நிலை வீராங்னையான செக் குடியரசை சேர்ந்த  கரோலினா பிளிஸ்கோவா (3வது ரேங்க்),  பிரேசிலின்   ஹடாட் மாயாவுடன் (115 வது ரேங்க்) 3 வது சுற்றில் மோதினார். அதில் மாயா 2 மணி, 4 நிமிடம் போராடி 6-3, 7-5 என நேர் செட்களில் பிளிஸ்கோவாவை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆஸ்திரேலியாவின்  அய்லா டம்யானவிச் (47வது ரேங்க்) 4-6, 3-6 என நேர் செட்களில் தாமரா ஜிடான்செக்கிடம் (33வது ரேங்க், ஸ்லோவேனியா)  தோற்றுப்போனார். இப்போட்டி ஒரு மணி, 36 நிமிடங்களுக்கு நீடித்தது. மற்றொரு 3வது சுற்றில் கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்கு (18வது ரேங்க்) 6-7 (5-7), 3-6 என்ற நேர் செட்களில் அனெட் கோன்டவெய்ட்டிடம் (20வது ரேங்க், எஸ்டோனியா) போராடி தோற்றார். ஸ்பெயின் வீராங்கனை  பவுலா படோசா (27வது ரேங்க்) தனது 3வது சுற்றில் 6-2, 6-2 என நேர் செட்களில் அமெரிக்காவின் கோரி காப்பை (19வது ரேங்க்) வீழ்த்தினார். எனினும், மற்ற முன்னணி வீராங்கனைகளான  பார்பரா கிரெஜ்சிகோவா (செக் குடியரசு),  ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), ஆன்ஸ் ஜெபர் (துனிசியா) ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றனர். கிரிகோர் வெற்றி: ஆடவர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில்  பல்கேரியா வீரர்   கிரிகோர் திமித்ரோவ் (28வது ரேங்க்)  6-3, 6-4 என நேர் செட்களில் அமெரிக்காவின் ரெய்லி ஒபெல்காவை (20வது ரேங்க்) வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய 4வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு 3வது சுற்றில்  அமெரிக்க வீரர்  ஜான் இஸ்னர் காயம் காரணமாக வெளியேற, இத்தாலியின் யானிக் சின்னர் 4வது சுற்றுக்கு தகுதி பெற்றார். அதேபோல் கேஸ்பர் ருட் (நார்வே), டியகோ ஷ்வார்ட்ஸ்மன் (அர்ஜென்டினா), கேமரான் நோரி (இங்கிலாந்து), டாமி பால் (அமெரிக்கா) ஆகியோரும் 4வது சுற்றில் விளையாட உள்ளனர்.

Related Stories:

More
>