நாளை மறுநாள் உள்ளாட்சி தேர்தல் மனு தாக்கல்: புதுச்சேரி தே.ஜ. கூட்டணியில் இடியாப்ப சிக்கல் இன்னும் நீடிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 21, 25 மற்றும்28 ஆகிய தேதிகளில் 3 கட்டமாக இத்தேர்தல் நடக்கிறது. இதனிடையே முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நாளை மறுநாள் (30ம்தேதி) தொடங்குகிறது. அக். 7ம்தேதி மனுதாக்கலுக்கு கடைசிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதுச்சேரி அரசியல் கட்சிகள் நகராட்சி, கொம்யூன் பதவிகள் யார், யாருக்கு என்பதை இறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

தேஜ கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் அக்கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் காரைக்கால் நகராட்சி பதவியை அதிமுகவுக்கு ஒதுக்கலாம் என பாஜ கூட்டணி கட்சித் தலைவரான ரங்கசாமியிடம் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதை ஏற்க அதிமுக மறுத்துவிட்டது. மாறாக பாஜக போட்டியிட திட்டமிட்டுள்ள புதுச்சேரி நகராட்சி பதவியை அதிமுக கேட்டுள்ளது. அதேபோல் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் மற்ற 2 நகராட்சிகளான மாகேயில் என்ஆர் காங்கிரஸ், ஏனாமில் பாஜக போட்டியிட விருப்பம் தெரிவித்தது.

ஆனால் ஏனாமை என்ஆர் காங்கிரஸ் கேட்பதால் இதிலும் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை என்று தெரிகிறது. இதேபோல் கொம்யூன்களில் கோட்டுச்சேரியில் அதிமுகவுக்கும், நெடுங்காடு, திருநள்ளாறில் என்ஆர் காங்கிரசுக்கும், நிரவி மற்றும் டிஆர் பட்டினத்தில் பாஜகவும் போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிகிறது. இதிலும் சுமூக உடன்பாடு எட்டப்படாத நிலையில், முதல்கட்ட பேச்சு தோல்வியில் முடிந்து நிர்வாகிகள் கலைந்து சென்றதாக தகவல் வெளியாகி வருகின்றன.

மேலும் 2கட்ட தேர்தலுக்கான நகராட்சி ஒன்றில் என்ஆர் காங்கிரசும், மற்றொன்றில் பாஜகவும் களமிறங்கும் முடிவில் உள்ளதோடு 75 கவுன்சிலர்களுக்கான இடங்களில் இந்த இரு கட்சிகளும் தலா 30 இடங்களை பங்கீட்டுவிட்டு மீதமுள்ள 15 பதவிகளை மட்டுமே அதிமுகவுக்கு ஒதுக்க முன்வந்துள்ளதாக தெரிகிறது. இதற்கும் அதிமுகவில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.  இதனிடையே வேட்பு மனுதாக்கல் தொடங்கியதும் இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க தேஜ கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இருப்பினும் இந்த நகராட்சி, கொம்யூன்களில் உள்ள சில இடங்களில் சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவாளர்கள் பலர் களமிறங்கும் முடிவில் உள்ளனர். அதிலும் பாஜக, என்ஆர் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து வரும் சுயேச்சைகள் தேஜ கூட்டணி சார்பிலேயே தங்களது ஆதரவாளர்களை நிறுத்த ஏற்பாடு செய்து வருகின்றனர். இதற்கு மற்ற கட்சிகள் இணக்கம் தெரிவிக்க மறுப்பதால் ஆளும் கூட்டணியில் புதிய சிக்கல் உருவாகி உள்ளது.

நாளை மறுநாள் முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில், தேஜ கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே சீட்டுக்காக குடுமிப்பிடி சண்டை நடந்து வருவது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், தேஜ கூட்டணியில் உள்ள சுயேச்சை எம்எல்ஏக்கள், தங்களது ஆதரவாளர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி சார்பில் சீட் ஒதுக்காவிட்டால், சுயேச்சையாக அவர்களை போட்டியிட வைக்கும் முடிவில் உள்ளதால் பரபரப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

Related Stories: