சேலம் இரும்பாலையில் பத்தே நாட்களில் ஆக்சிஜன் வசதியுடன் தற்காலிக மருத்துவமனை-அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

சேலம் : சேலம் இரும்பாலையில் பத்தே நாட்களில் ஆக்சிஜன் வசதியுடன் 500 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை உருவாக்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். சேலம் வந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயதீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று சேலம் இரும்பாலை வளாகத்தில் அமைக்கப்படும் தற்காலிக மருத்துவமனையை ஆய்வு செய்தார்.

பின்னர் இரும்பாலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இடத்தையும் பார்வையிட்டார்.  அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மின்வெட்டு ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் பணியாற்றி வரும் மின் ஊழியர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு தொழிற்சங்கத்தினர் கேரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

சேலம் மாவட்டத்தில் தினமும் 600 பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கான படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் வசதி தேவை அதிகமாக உள்ளது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அனைவருக்கும் தரமான சிகிச்சை அளிக்கப்படும். வீடுகளில் தனிமையாக இருக்க இயலாதோரை கொரோனா சிகிச்சை மையத்திற்கு அழைத்து வர உத்தரவிடப்படுள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

சேலம் இரும்பாலையில் 10 நாட்களுக்குள் தற்காலிக மருத்துவமனை அமைக்கும் பணிகள் நிறைவடையும். இதற்கென 1000கிலோ வாட் மின்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து துறையினர் ஒருங்கிணைந்து மருத்துவமனை அமைக்கும் பணியினை விரைந்து முடிக்க வேண்டும். தேவை ஏற்பட்டால் படுக்கைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். இதைதொடர்ந்து, அமைச்சர் செந்தில்பாலாஜி இடைப்பாடி, ஆத்தூர் பகுதிக்கு சென்று ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணிகள் தொடங்குவது குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில், கலெக்டர் ராமன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: