குன்னூர் மலைரயில் பாதை குகையிலிருந்து ஆக்ரோஷமாக வந்த யானை: ஊழியர்கள் நூலிழையில் உயிர் தப்பினர்

 

குன்னூர்: குன்னூர் மலை ரயில்பாதையில் குகையிலிருந்து ஆக்ரோஷமாக வந்த ஒற்றை யானையிடம் இருந்து ரயில்வே ஊழியர்கள் நூலிழையில் உயிர் தப்பினர். ​நீலகிரி மாவட்டம்​, குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே அமைந்துள்ள ஹில்குரோவ் ரயில் நிலையப் பகுதியில் ரயில்வே ஊழியர்கள் தண்டவாளப் பராமரிப்புப் பணிகளில் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு இருண்ட குகைக்குள் இருந்து சப்தம் கேட்பதை அவர்கள் கவனித்தனர். ​

என்ன நடக்கிறது என்பதை அறிய ஊழியர்கள் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்தவாறு குகையை நெருங்கினர். அப்போது எதிர்பாராத விதமாக, குகைக்குள் இருந்து ஒற்றை காட்டு யானை மிகுந்த ஆக்ரோஷத்துடன் வெளியே ஓடி வந்தது.​ யானை தன்னை நோக்கி வேகமாக வருவதைக் கண்ட ஊழியர்கள், ஐயோ யானை வருது… என்று அலறியடித்தபடி தண்டவாளத்தின் ஓரமாகவும், பாலத்தின் மீதும் சிதறி ஓடினர். அதிர்ஷ்டவசமாக ஊழியர்கள் அனைவரும் ஓடிச்சென்று பாதுகாப்பான இடத்திற்குச் சென்றதால், பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ​

குகையிலிருந்து வெளியே வந்த யானை, சிறிது நேரம் தண்டவாளத்திலேயே நின்று ஊழியர்களைக் கவனித்தது. பின்னர், ஆக்ரோஷம் தணிந்து அமைதியாக தண்டவாளத்தை விட்டு இறங்கி அருகிலிருந்த வனப்பகுதிக்குள் சென்றது. காப்புக்காடு மற்றும் மலை ரயில் பாதைகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதால், அங்கு பணியில் ஈடுபடும் ஊழியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Related Stories: