சென்னை: தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயர்த்தும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் ‘திராவிட மாடல்’ அரசுக்கு மகுடம் சூட்டும் விதமாக, 2024-25ம் நிதியாண்டிற்கான இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் அனைத்து மாநிலங்களையும் பின்னுக்குத் தள்ளி, தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.
தொழில்துறையில் இந்தியாவிற்கே வழிகாட்டியாக திகழும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சிறப்பான தொழில் கொள்கைகள், ஜவுளித்துறைக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகைகள், தடையற்ற மின்சாரம் மற்றும் கட்டமைப்பை மேம்படுத்தியதன் நேரடி விளைவாகவே இந்த சாதனை சாத்தியமாகியுள்ளது. ‘NIRYAT’ தரவுகளின் அடிப்படையில் வெளியாகியுள்ள புள்ளிவிவரங்களின்படி, 2024-25ம் ஆண்டில் தமிழ்நாட்டின் மொத்த ஜவுளி ஏற்றுமதி மதிப்பு 7,997.17 மில்லியன் டாலர்களாக பதிவாகி, இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலமும் நெருங்க முடியாத உச்சத்தை தொட்டுள்ளது.
கடந்த ஆட்சி காலமான 2020-21ம் ஆண்டில் 6,193.39 மில்லியன் டாலர்களாக மட்டுமே இருந்த தமிழ்நாட்டின் ஜவுளி ஏற்றுமதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டுகளில் அபரிமிதமான எழுச்சியை கண்டுள்ளது. அரசின் சார்பாக திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட ஜவுளி மையங்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்புச் சலுகைகள் மற்றும் தொழிலாளர் நலன் சார்ந்த நடவடிக்கைகளால், ஏற்றுமதி முந்தைய ஆண்டுகளை விட 29 சதவீதம் என்ற பிரமாண்ட வளர்ச்சியை பதிவு செய்து 7,997.17 மில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. தொழில் வளர்ச்சியில் தங்களை முன்னணி மாநிலங்களாக காட்டிக் கொள்ளும் குஜராத் மற்றும் மகாராஷ்டிராவை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தனது சிறப்பான செயல்பாடுகளால் வெகுவாக பின்னுக்கு தள்ளியுள்ளது.
இப்பட்டியலில், தமிழ்நாடு – 7,997.17 மில்லியன் டாலர்கள் (முதலிடம்), குஜராத் – 5,646.01 மில்லியன் டாலர்கள் (இரண்டாம் இடம்), மகாராஷ்டிரா – 3,831.28 மில்லியன் டாலர்கள் (மூன்றாம் இடம்), உத்தரபிரதேசம் – 3,679.5 மில்லியன் டாலர்கள் (நான்காம் இடம்) என உள்ளன. குஜராத்தை விட தமிழ்நாடு சுமார் 2,351 மில்லியன் டாலர்கள் அளவுக்கு கூடுதலாக ஏற்றுமதி செய்து, இந்தியாவின் ஜவுளி தலைநகரம் தமிழ்நாடுதான் என்பதை ஆணித்தரமாக நிரூபித்துள்ளது.
பிற மாநிலங்களின் நிலையை பொறுத்தவரை மத்திய பிரதேசம் (1,324.97), மேற்கு வங்கம் (921.95), ராஜஸ்தான் (855.37) போன்ற மாநிலங்கள் பல மடங்கு பின்தங்கியுள்ளன. தென்னிந்தியாவில் ஆந்திரா (506.42), கேரளா (434.14), தெலங்கானா (111.09) ஆகிய மாநிலங்களை விட தமிழ்நாடு மிகப்பெரிய ஜாம்பவானாக திகழ்கிறது. எளிதான தொழில் தொடங்கும் சூழல், உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ஈர்க்கப்பட்ட பல்லாயிரம் கோடி முதலீடுகள், புதிய மினி ஜவுளி பூங்காக்கள் அமைக்கும் திட்டம் போன்ற முதல்வர் மு.க.ஸ்டாலினின் சீரிய முன்னெடுப்புகளே இந்த மாபெரும் வெற்றிக்குக் காரணமாக அமைந்துள்ளன.
கப்பல் மற்றும் விமான போக்குவரத்து மூலம் சர்வதேச அளவில் கொடிகட்டி பறக்கும் தமிழ்நாட்டின் இந்த ஜவுளி ஏற்றுமதி சாதனை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ள ‘2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்’ என்ற இலக்கை நோக்கித் தமிழ்நாடு அசுர வேகத்தில் முன்னேறி வருவதற்கான மிகச் சிறந்த சான்றாக அமைந்துள்ளது எனப் பொருளாதார வல்லுநர்களும், தொழில் துறையினரும் பாராட்டி வருகின்றனர்.
