சட்டமன்ற தேர்தலையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலில் முக்கிய பிரமுகர்கள் தரிசனம்

 

திருச்செந்தூர்: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் வழிபட்டு வருகின்றனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல ஆளுங்கட்சி அமைச்சர்கள், எதிர்க்கட்சி முன்னாள் அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு உயரதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என அவ்வப்போது வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் வரும் ஏப்.23ம் தேதி சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

இதையொட்டி ஆளும் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நேற்று தலைமை செயலகத்தில் தொடங்கியது. அதேபோல அதிமுகவில் ஏற்கனவே நேர்காணல் நடந்துள்ளது. நாதகவில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு விட்டது. தவெக தலைவர் விஜய், வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. தற்போதைய சூழலில் தமிழகததில் 4 முனைப்போட்டியே உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விடும். இதனால் தேர்தல் வெற்றி பெற வேண்டியும், சீட் கிடைக்க வேண்டியும் இந்நாள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் குரு ஸ்தலமான திருச்செந்தூர் முருகனை வழிபட்டு வருகின்றனர்.

நேற்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா உள்ளிட்டவர்களும் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் திரளான பக்தர்கள் கோயிலில் அதிகாலை முதல் கடலில் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர். மாலையில் வள்ளி, தெய்வானை அம்மனுடன் தங்கத்தேரில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதரையும் வழிபட்டனர்.

Related Stories: