சென்னை: சத்குருவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் மழைநீர் சேகரிப்பு கருத்தரங்கம், வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் மற்றும் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் (தென் கிழக்கு கடலோர மண்டலம்) இயக்குனர் சிவக்குமார் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
சத்குருவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு ‘வான் அமிர்தம்’ என்ற மாபெரும் மழைநீர் சேகரிப்பு கருத்தரங்கம், வரும் 22ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது. மழைநீர் சேகரிப்பு என்பது இன்றைய காலத்தின் மிக முக்கியமான தேவையாக உள்ளது. வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் மழைநீரை எவ்வாறு முறையாக சேமிப்பது என்பது குறித்த விரிவான பயிற்சிகளையும், செயல்முறை விளக்கங்களையும் இந்த கருத்தரங்கில் வழங்க இருக்கின்றோம்.
நீர் மேலாண்மை மற்றும் நீர் பாதுகாப்பில் தன்னலமற்ற முறையில் மிகச்சிறந்த பங்களிப்பை ஆற்றிவரும் முக்கிய நீர்நிலை ஆர்வலர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது. மேலும், கருத்தரங்கு நடைபெறும் வளாகத்தில் மழைநீர் சேகரிப்புக் கருவிகள், நவீன நீர்ப்பாசன முறைகள் மற்றும் இயற்கை வேளாண் உற்பத்திப் பொருட்களின் பிரம்மாண்டமான விற்பனை மற்றும் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தமிழக நிலத்தடி நீரின் தற்போதைய நிலை மற்றும் எதிர்காலத் தீர்வுகள், நவீன நீர் மேலாண்மை முறைகள், மழைநீர் சேகரிப்பு உள்ளிட்டவை குறித்து சிறப்பு கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினர்.
