எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட 7 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்ய கோரி திமுக வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட 7 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்ய கோரி திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் ரா.கிரிராஜன், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.காமராஜ், கே.சி.வீரமணி, கே.பி.அன்பழகன், எடப்பாடி பழனிசாமியின் உறவினர் சேலம் இளங்கோவன், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தி.நகர் சத்யா ஆகியோருக்கு எதிராக தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுக்களில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது, சாலைகள் அமைப்பதில் முறைகேடுகள் நடைபெற்றதாக வழக்கு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு, தெருக்களுக்கு பொருத்தப்படும் எல்இடி வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக வழக்கு என லஞ்ச ஒழிப்புத்துறையால் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த தங்கமணி, கே.பி.அன்பழகன், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ், சி.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி உள்ளிட்டோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்குகளின் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. அதேபோல் அதிமுக முன்னாள் எம்எல்ஏ தி.நகர் சத்யா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் இளங்கோவன் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விட்டால் அந்த குற்றம் தொடர்பான வழக்கை தொடர முடியும் என்று சட்டவிரோத பண பரிமாற்றத்தில் சட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் குற்றம் செய்தவர்கள் பண மோசடி மற்றும் வருமானத்துறை சொத்து சேர்த்தது, ஊழல் குற்றத்தில் ஈடுபட்டதால் அவர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்வதற்கான முகாந்திரம் உள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறைக்கு பல்வேறு புகார்கள் அனுப்பியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. புகாரில் சிக்கியவர்களான முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏ, கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் ஆகியோர் அதி முக கட்சியை சேர்ந்த வர்கள்.

அதிமுகவும்,பாஜவும் கூட்டணி கட்சிகள் என்பதால் அமலாக் கத்துறை அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய தயக்கம் காட்டி வருகிறது என்ற அச்சம் உள்ளது. எனவே, லஞ்ச ஒழிப்புத்துறை சேகரித்துள்ள ஆவணங்கள் அடிப்படையில் இவர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர முடியும். ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் இவர்கள் மீது வழக்குகள் உள்ளதால், சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்வதற்கான முகாந்திரம் உள்ளதால் அவர்கள் மீது அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வர உள்ளன.

Related Stories: