தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த 3 நாளில் ரூ.42.65 கோடி பறிமுதல்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலான 3 நாட்களில் ரூ.42.65 கோடி ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், சட்டவிரோத பண பரிவர்த்தனைகள் மற்றும் வாக்காளர்களை கவரும் முயற்சிகளை தடுக்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கைகளின் விளைவாக கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.42.65 கோடி ரொக்கம் மற்றும் பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, தேர்தல் செலவின கண்காணிப்பு குழுக்கள், பறக்கும் படைகள் மற்றும் பல்வேறு அமலாக்க அமைப்புகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலம் ரூ.2.37 கோடி ரொக்கம், ரூ.18 மதிப்பு லட்சம் மதுபானம், ரூ.2.88 கோடி போதைப்பொருட்கள், ரூ.16.42 கோடி விலைமதிப்பற்ற உலோகங்கள், ரூ.20.80 கோடி மதிப்புள்ள இலவச பொருட்கள் மற்றும் பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், சட்டவிரோத பணப் புழக்கம், வாக்காளர்களை கவரும் நோக்கில் வழங்கப்படும் பணம், பரிசுப் பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களின் விநியோகத்தை முற்றிலும் தடுக்க சிறப்பு கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் சோதனைச் சாவடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், வாகனங்கள் மற்றும் சந்தேகப்படும் இடங்களில் தொடர்ந்து சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளன. தேர்தல் காலத்தில் சட்டவிரோத செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தக் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

Related Stories: