* 400 போலீசார் பாதுகாப்பு: டிரோன் மூலம் கண்காணிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையொட்டி 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்; டிரோன் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் பூக்குழி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இதில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவர். இந்தாண்டு பூக்குழி திருவிழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதை தொடர்ந்து பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் தொடங்கினர். அன்று முதல் தினசரி அம்மன் பல்வேறு வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா இன்று மதியம் தொடங்கியது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், ஏராளமான பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்தும், அழகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கைகளை செலுத்த கோயில் வளாகத்தில் பல்வேறு பகுதிகளில் தற்காலிக உண்டியல்கள் வைக்கப்பட்டிருந்தன. மேலும், நெரிசலை தவிர்க்க பூக்குழி இறங்கும் ஆண், பெண் பக்தர்களுக்கு தனிப்பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன.
பக்தர்கள் வரும் பாதைகளில் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. மோர் பந்தல் அமைத்து நீர், மோர் வழங்கினர். பக்தர்கள் வரும் பாதையில் தண்ணீர் தெளிக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் மேல் தண்ணீர் தெளிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் சவர் அமைக்கப்பட்டிருந்தது. மேலும், பாதைகளில் நீரில் நனைத்த சாக்குப்பைகள் போடப்பட்டிருந்தன. தீயணைப்புத்துறையினரும், மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் இருந்தனர்.
400 போலீசார் பாதுகாப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி பாலசுந்தரம், நகர் இன்ஸ்பெக்டர் ராஜதுரை ஆகியோர் தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சமூக விரோதச் செயல்களை தடுக்கவும், பிக்பாக்கெட் திருடர்களை கண்காணிக்கவும், கோயிலைச் சுற்றி 41 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. பூக்குழி திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி ஜோதிலட்சுமி தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
