சென்னை: சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி அங்கன்வாடி பணியாளர்களுக்கு கைப்பேசி வழங்கப்பட்டதாக இன்பதுரையின் புகாரில் உண்மை இல்லை என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை மனு அளித்தபின் நிருபர்களிடம் கூறியதாவது:
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின் எவ்விதமான நலத்திட்டங்கள், அரசு திட்டங்கள் மேற்கொள்ளக்கூடாது என்பது தேர்தல் விதி. ஆனால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன்கள் வைக்கப்பட்டிருந்தது. மாவட்ட திட்ட அலுவலர் அறையில் இருந்த செல்போன்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதை கேட்டதற்கு மாவட்ட ஆட்சியர் தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இது யாருக்கு எதற்காக வைக்கப்பட்டுள்ளது என தெரியவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த பிறகு அரசால் செல்போன்கள் வழங்கப்பட்டதாக வரப்பெற்ற இன்பத்துரை புகாருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்து வெளியிட்டுள்ள அறிக்கை:
நடத்தை விதிகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாகவே கடந்த 13.3.2026 அன்று மாலை 6 மணியளவில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு 2696 செல்போன்கள் அரசிடமிருந்து வரப்பெற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக இரண்டாம் தளத்தில் உள்ள அறை எண்.204ல் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. 15.3.2026 அன்று தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்ததால் மேற்படி செல்போன்கள் அதே அறை எண்ணில் பாதுகாப்பாக பூட்டி வைக்கப்பட்டு அதனுடைய திறவுகோல் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்து உறுதிப்படுத்தியுள்ளார். எனவே, சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அங்கன்வாடி பணியாளர்களுக்கு செல்போன்கள் வழங்கப்பட்டதாக வரப்பெற்ற புகாரில் உண்மை இல்லை என்றும், தேர்தல் நடத்தை விதிமுறைகளும் மீறப்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
