சென்னை: சகோதர மனப்பான்மையோடு அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என யுகாதி பண்டிகையை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): யுகாதி திருநாள் வாழ்வில் வளர்ச்சியும், மகிழ்ச்சியும் பெற்று தரும் என்பது நம்பிக்கை. இந்நாளில் மக்கள் தங்களது வாழ்வில் புது முயற்சிகளையும், தொழில்களையும் தொடங்கி அதனால் ஏற்றம் பெறுகிறார்கள். நாட்டில் பல்வேறு மொழி, கலாச்சாரம் என்றிருந்தாலும், இந்தியர் என்ற சகோதர மனப்பான்மையோடு அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்து சாதி, மத துவேஷம் நீங்கி தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் அனைத்து மக்களும் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட வேண்டும்.
ஜி.கே.வாசன் (தமாகா): தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் தமிழக மக்களோடு இரண்டறக் கலந்து இன்ப துன்பங்களில் பங்கெடுத்து சகோதர சகோதரிகளாக வாழ்ந்து வருவது பெருமைக்குரியது. தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மக்களுக்கு இடையேயான இந்த ஒற்றுமை உணர்வும், நட்புணர்வும் இப்புத்தாண்டிலும் வலுப்பெற வேண்டும். யுகாதி பண்டிகையை கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு அன்பு, அமைதி, மகிழ்ச்சி மற்றும் நன்மைகள் மேலோங்க வாழ்த்துகள்.
