சென்னை: தமிழக சபாநாயகர் அப்பாவு நேற்று முன்தினம் இரவு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வணிக ரீதியிலான சிலிண்டர்கள் கிடைக்காததால், எத்தனையோ ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. ஒன்றிய இணைய அமைச்சர் எல்.முருகன், பத்திரிகைகளை படித்துவிட்டு வந்து, பேட்டிக் கொடுக்க வேண்டும். பத்திரிகைகள் படிக்காமல் செய்திகளை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் பேசுவது சரியல்ல. பெட்ரோல், டீசல், காஸ் இவை அனைத்தும் ஒரே மூலப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இவை அனைத்தும் தமிழ்நாட்டில் கிடைக்கவில்லை என்று திமுகவினர் செயற்கையாக வதந்தியை உருவாக்குகிறார்கள் என்று இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சனம் செய்கிறார்.
ஆனால் ஒன்றிய அமைச்சர் நிர்வாகத்தில் தான் பெட்ரோலிய துறை உள்ளது. அதற்கான டீலர்கள் அனைவரும் அவர்களுடைய ஆட்கள். அவர்கள் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி விலை அதிகமாக விற்பனை செய்ய பார்க்கின்றனர். தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறும் ஒன்றிய இணை அமைச்சர், முதலில் மணிப்பூர் சென்று பார்க்க வேண்டும். அங்கு போலீஸ் வேனில் சென்ற பெண்ணுக்கு என்ன நிலை ஏற்பட்டது என்பதை பார்த்துவிட்டு வந்து, அவர் தமிழ்நாட்டைப் பற்றி பேசட்டும். இவ்வாறு அப்பாவு கூறினார்.
