தேர்தல் நெருங்குவதையொட்டி விஸ்வரூபம் எடுக்கும் நெய்யாறு இடது கரை சானல் விவகாரம்

களியக்காவிளை: மொழிவாரி மாநில பிரிவினைகளுக்கு முன்பு, நெடுமங்காடு, நெய்யாற்றின்கரை, விளவங்கோடு ஆகிய மூன்று தாலுகா மக்களின் விவசாய தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக நெய்யாறு அணை கட்டப்பட்டது. 84.75 அடி உயரம் கொண்ட நெய்யாறு அணையின் பாசனத்திட்டத்தின் மூலம் 38 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனவசதி பெறப்பட்டு வந்தது. இந்த அணையின் மொத்த கொள்ளளவில் 50 சதவீதம் தண்ணீர், குமரி மாவட்டத்தின் அணைமுகம், கருப்பையாறு உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து செல்கிறது. கடந்த 1956ம் ஆண்டு மொழிவாரியாக மாநில எல்லைகள் வரையறுக்கப்பட்டன. அப்போது, பத்மனாபபுரம் அரண்மனையை பாதுகாத்து நிர்வகிக்கும் உரிமையை கேரள அரசு ஒப்பந்தம் மூலம் எடுத்துக்கொண்டது.

அதுேபொல் ‘ஆர்கனைசேன் ஆப் ஸ்டேட் ஆக்ட்’ என்ற ஒப்பந்தம் மூலம் நெய்யாறு அணையில் இருந்து தமிழக பகுதி விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்க கேரள அரசும் உறுதியளித்தது. அந்த ஒப்பந்தப்படி 1956ம் ஆண்டு முதல் பாறசாலை அருகே அமைக்கப்பட்டுள்ள சுந்தரிமுக்கு ஷட்டர் மூலம் குமரி மாவட்ட பாசனக் கால்வாய் மூலம் தமிழகத்திற்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நெய்யாறு இடதுகரைக்கால்வாய் மூலம் குமரி மாவட்டத்தின் அண்டுகோடு, இடைக்கோடு, பாகோடு, விளவங்கோடு, குளப்புரம், மெதுகும்மல், ஆறுதேசம், ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய ஒன்பது வருவாய் கிராமங்கள் பாசன வசதி பெற்று வந்தது.

இதற்கான குமரி மாவட்டத்தில் 22.374 கி.மீ நீளமுடைய பிரதான கால்வாய் அமைக்கப்பட்டு, இதன்மூலம் 2347 சதுர மைல்பரப்பு பகுதிகள் பாசன வசதி பெற்றன. அதோடு, பிரதான சானலில் இருந்து பிரிந்து செல்லும் முல்லையாறு கிளைக்கால்வாய் 12.40 கி.மீ நீளத்தில் வெட்டப்பட்டு, அதன் மூலம் 2264 ஏக்கர் பகுதிகளிலும் விவசாயம் செழிப்பாக நடந்து வந்தது. இந்நிலையில் 1970களில் தண்ணீர் திறப்பது தொடர்பாக அடிக்கடி கேரள அரசு தரப்பில் சுணக்கம் காட்டி வந்தது. இதனால் விவசாயிகள் போராட தொடங்கினர். இந்நிலையில் 1971 ஏப்ரல் மாதத்தில் தமிழக அரசு ஒரு வரைவு ஒப்பந்தத்தை தயார் செய்து கேரள அரசுக்கு அனுப்பியது.

 அதன் சாராம்சம் என்னவெனில், நெய்யாறு என்பது ஒரு பன்மாநில நதி என்பதை ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன. பன்மாநில நதியில் ஓடும் நீரில் அந்த நதி பாயும் அனைத்து மாநிலங்களுக்கும் உரிமை உண்டு. எனவே இரு மாநிலங்களுக்கு இடையே நீர் பங்கீடு மற்றும் பராமரிப்பு செலவு குறித்து ஓர் ஒப்பந்தம் உருவாக்க வேண்டியுள்ளது. இதுவே தமிழக அரசு அனுப்பிய வரைவு ஒப்பந்தம். ஆனால் அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள கேரள அரசு ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் கடந்த 2004 ஜனவரியில் கேரள அரசு நெய்யாறு இடதுகரை சானலில் தண்ணீர் வரும் சுந்தரிமுக்கு ஷட்டரை அடைத்து, அதற்கு பிறகு 16 ஆண்டுகளாக தண்ணீர் விட கேரள அரசு முன்வரவில்லை.

 இது தொடர்பாக கடந்த 3.10.2007 அன்று அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி, கேரள மாநில முதல்வருக்கு இது தொடர்பாக ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் விளவங்கோடு தாலுகாவின் விவசாயிகளுக்கு நெய்யாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடவேண்டும். தண்ணீர் திறந்துவிடுவதில் ஏதேனும் பிரச்னை இருந்தால், அது குறித்து தனியே தீர்வுகாணலாம் என கூறியிருந்தார். இப்பிரச்னை குறித்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் கேரள அரசை வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 18.10.2006 அன்று கேரள சட்டமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றப்பட்டது.

அந்த சட்டப்படி, நெய்யாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தந்தால், அந்த தண்ணீருக்கு கேரள அரசு நிர்ணயம் செய்யும் விலையை தமிழக அரசு தரவேண்டும் என உள்ளது. நெய்யாறு ஒரு பன்மாநில நதியாகும். இதில் தமிழகத்திற்கும் உரிமை உண்டு எனவே தமிழகத்திற்கு கேரள அரசு தரும் தண்ணீருக்கு பணம் தர தேவையில்லை என தமிழக அரசு கூறி வருகிறது. 1956ல் நெய்யாறு இடதுகரை சானலில் விநாடிக்கு 150 கனஅடி தண்ணீர் விடுவதாக ஒப்பந்தம் உள்ளது. ஆனால் 1970ல் இந்த அளவை 135 கனஅடியாக குறைத்து, 2004ல் முற்றிலுமாக நிறுத்திவிட்டது கேரள அரசு, இதையடுத்து,

நெய்யாறு சானல் கிளை விவசாயிகள் சங்கம் சார்பிலும், தமிழ்நாடு பட்டப்பொறியாளர் சங்கம் சார்பிலும் குமரி மாவட்ட பாசன விவசாயிகள் சங்கம் சார்பிலும் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. குமரி மாவட்டத்தில் கருப்பையாறு வழியாக நெய்யாறு அணைக்கு தினமும் 150 கனஅடி நீர் சென்று கொண்டிருக்கிறது. மழைக்காலங்களில் இதன் அளவு அதிகரிக்கும். எனவே சட்டப்படி அணுகுவதைவிட தார்மிக அடிப்படையில் கேரள அரசு தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்பது குமரி மாவட்ட விவசாயிகளின் குரலாக நீடிக்கிறது.

பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும்

முன்னாள் எம்எல்ஏ லீமாறோஸ் கூறியதாவது: இப்பிரச்சினை தொடர்பாக கேரள முதல்வராக இருந்த அச்சுதானந்தனை குமரி மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் குழுவாக சென்று சந்தித்தோம். நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார். ஆனால் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் தொடர்வதால் தண்ணீர் திறப்பதில் தாமதம் நிலவுகிறது. தமிழக அரசு தரப்பில், வழக்கை துரிதப்படுத்தி தீர்வு காணும் முயற்சியில் ஈடுபடவேண்டும். இல்லாவிட்டால், தமிழக அரசு தரப்பில் கேரள அரசிடம் நேரில் பேச்சு வார்த்தை நடத்தி சானலில் தண்ணீர் திறக்க வழிவகை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

விவசாயிகள் நம்பிக்கை

குமரி மாவட்டத்தில் அரசியல் கட்சிகளிடையே நிலவும் ஒற்றுமையின்மையே இப்பிரச்னை தீர்வுக்கு வராததற்கு காரணம் எனவும் விவசாயிகள் குற்றம் சாட்டிவருகின்றனர். தற்போது ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கித்தவிக்கும் நெய்யாறு இடதுகரை சானல், பல இடங்களிலும் கழிவுநீர் ஓடைகளாக காட்சியளிக்கிறது. விவசாயத்திற்கு போதிய நீராதாரம் தடைபட்டதால், விவசாயிகள் ரப்பர், தென்னை ஆகிய பணப்பயிர்களுக்கு மாறிவிட்டனர். எனினும் கேரள அரசு தண்ணீர் திறக்கும் பட்சத்தில் மீண்டும் விவசாயம் துளிர்விடும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர் விவசாயிகள்.

புதிய அணை கட்டலாம்

விவசாயிகள் சங்க உறுப்பினரும், காங்கிரஸ் நிர்வாகியுமான செல்வகுமார் கூறியதாவது: 15 ஆண்டுகாலம் நெய்யாறு இடதுகரை சானல் தண்ணீர் வராததால், விவசாயிகள் மாற்று விவசாயம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சானல் தூர்வாரி, தமிழக பகுதிகளில் சிறு அணைகளை உருவாக்கி அதன்மூலம் விவசாய தேவைகளுக்கு தண்ணீர் வழங்க தமிழக அரசு முயற்சி மேற்கொள்ளவேண்டும். பல்லிக்கூட்டம் அணை கட்டும் திட்டம் பல ஆண்டுகளாக அரசின் பரிசீலனையில் உள்ளது. கருப்பையாறு, அணைமுகம் பகுதிகளில் இருந்து நெய்யாறு அணைக்கு செல்லும் தண்ணீரை தேக்கி ஒரு அணைத்திட்டத்தை உருவாக்கினால், இதே சானல் மூலம் விளவங்கோடு தாலுகாக பகுதிகளுக்குட்பட்ட 8500 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதியை ஏற்படுத்த முடியும். விவசாயம் சார்ந்த தேவைகளுக்காக தண்ணீரை வழங்குவதால் அரசு பாராமுகமாக இருக்கக்கூடாது என்றார்.

Related Stories: