அதிமுகவை தொடர்ந்து விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேமுதிகவும் புறக்கணிப்பு: பிரேமலதா அறிவிப்பு

சென்னை: அதிமுகவை தொடர்ந்து, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேமுதிகவும் புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 10ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜ கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனைப்போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அதிமுக இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் அறிவித்தார். இந்த அறிவிப்பு அதிமுக தொண்டர்களுக்கும், அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவிற்கும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் தேமுதிக என்ன நிலைப்பாடு எடுக்க போகிறது என்ற பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், அதிமுக போலவே, தேமுதிகவும் தேர்தலை புறக்கணிப்பதாக நேற்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்ட அறிவிப்பு: நடக்க இருக்கும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிக்கிறது. இதுவரை தமிழகத்தில் நடந்த அனைத்து இடைத்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்களில் போட்டியிட்ட தேமுதிக விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணிக்கிறது. காரணம், தேர்தல்கள் என்பது ஜனநாயக ரீதியாக நேர்மையாக நடக்கவேண்டிய தேர்தல்கள். இன்றைய கால கட்டத்தில் ஆட்சியர்களின் அதிகாரத்தால் தேர்தல்கள் தவறாக நடத்தப்படுகிறது.

இந்த இடைத்தேர்தல் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் உழைப்பு, நேரம், பணம் அனைத்தையும் விரயம் செய்ய விரும்பவில்லை. எங்கள் தொண்டர்களின் உழைப்பை வீணடிக்க விரும்பாத காரணத்தால் தேமுதிக இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போதைய நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

The post அதிமுகவை தொடர்ந்து விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேமுதிகவும் புறக்கணிப்பு: பிரேமலதா அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: