புரோட்டா சாப்பிட்ட 5 பசுக்கள் பலி

திருவனந்தபுரம்: கொல்லம் அருகே அளவுக்கு அதிகமாக புரோட்டா சாப்பிட்ட 5 பசுக்கள் பரிதாபமாக உயிரிழந்தன. கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள வெளிநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹஸ்புல்லா. இவர் அப்பகுதியில் மாட்டுப்பண்ணை வைத்துள்ளார். நேற்று முன்தினம் காலையில் இவர் தன்னுடைய பண்ணையிலுள்ள பசுக்களுக்கு தீவனத்துடன் பலாப்பழமும், அருகிலுள்ள ஒரு ஓட்டலில் மிச்சம் வந்த ஏராளமான புரோட்டாவும் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் மாலையில் இவரது பண்ணையில் இருந்த பசுக்களில் சில சுருண்டு விழுந்தன. இதில் 5 பசுக்கள் செத்தன. இதுகுறித்து அறிந்த கொல்லம் மாவட்ட கால்நடைத்துறை டாக்டர்கள் ஹஸ்புல்லாவின் பண்ணைக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். இதில் அளவுக்கு அதிகமாக புரோட்டா சாப்பிட்டது தான் பசுக்கள் செத்ததற்கு காரணம் என தெரியவந்தது.

மயங்கி விழுந்த மேலும் சில பசுக்களுக்கு உடனடியாக உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. கேரள கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் சிஞ்சு ராணியும் பண்ணைக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினார். பசுக்களுக்கு என்னென்ன தீவனம் கொடுக்க வேண்டும் என்பது குறித்து பசு வளர்ப்பவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

The post புரோட்டா சாப்பிட்ட 5 பசுக்கள் பலி appeared first on Dinakaran.

Related Stories: