நியூயார்க் பல்கலை மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியதற்காக விஐடி வேந்தர் கோ.விசுவநாதனுக்கு பாராட்டு விழா: மேடையில் முதல்வர் பாராட்டு பத்திரம் வாசிப்பு

ஆலந்தூர்: நியூயார்க் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியதற்காக விஐடி வேந்தர் கோ.விசுவநாதனுக்கு சென்னையில் பாராட்டு விழா நடந்தது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் பாராட்டு பத்திரம் வாசிக்கப்பட்டது. இதில் அமைச்சர்கள், தமிழ் அறிஞர்கள், கல்வியாளர்கள் பங்கேற்றனர். விஐடி பல்கலைக்கழக நிறுவன தலைவர் கோ.விசுவநாதனுக்கு, நியூயார்க் மாநில பல்கலைக்கழகம் ‘மதிப்புறு முனைவர் பட்டம்’ வழங்கி கவுரவித்தது.

இதனை கொண்டாடும் விதமாக தமிழியக்கம் சார்பாக பாராட்டு விழா, சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் உலக தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வி.ஜி.சந்தோசம் தலைமை வகித்து வாழ்த்தி பேசினார். தமிழியக்கத்தின் அமைப்புச் செயலாளர் வணங்காமுடி, நல்லி குப்புசாமி, மாதவ.சின்ராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் அமைச்சர்கள் பி.சேகர்பாபு, பழனிவேல் தியாகராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, முன்னாள் அதிமுக அமைச்சர் பொன்னையன், திராவிட கழகத்தின் கொள்கை விளக்கச் செயலாளர் அருள்மொழி ஆகியோர் கலந்து கொண்டு விஐடி நிறுவனத் தலைவர் ஜி.விசுவநாதனை பாராட்டி பேசினர். இந்த விழாவில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேந்தர் விசுவநாதனை வாழ்த்தி கொடுத்தனுப்பிய பாராட்டு பத்திரத்தை மேடையில் வாசித்து, அதனை கோ.விசுவநாதனிடம் கொடுத்தார்.

* கல்வி உயர்ந்தால் நாடு உயரும்
விழா ஏற்புரையில் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேசுகையில், ‘‘புதிய கல்விக் கொள்கையில் 50 சதவீதமாக உயர வேண்டும் என அரசு சொல்கிறது. தமிழ்நாடு மட்டும்தான் 50 சதவீதத்தை எட்டி உள்ளது. இந்த ஆண்டு ஒன்றிய பட்ஜெட் வரவு செலவு கணக்கில் ரூ.47 லட்சம் கோடியில் ரூ.1 லட்சம் கோடிதான் கல்விக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. இங்கு நீண்ட நாட்களாக கேட்டுக்கொள்ளப்படுவது மொத்த வருவாயில் 6 சதவீதத்தை கல்விக்கு செலவிட வேண்டும் என்பதே. கல்வி உயர்ந்தால்தான் நாடும் வளர முடியும்.

விஐடி கல்லூரியில் ஸ்டார் சிஸ்டம் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாணவனையும், மாணவியையும் கிராமத்தில் இருந்து தேர்ந்தெடுத்து அனைத்தையும் இலவசமாக தருகிறோம். வேலையையும் கொடுத்து அனுப்புகிறோம். அவர்கள் என்ன சம்பாதிக்கிறார்கள் என்று எங்களது பேராசிரியர் கணக்கு கொடுத்தார். அதில் அவர்களது தந்தையர் சம்பாதித்ததை விட 10 மடங்கு 20 மடங்கு சம்பாதிக்கிறார்கள் என்று தெரிய வந்தது.

அதுபோல நாடு முழுவதும் வறுமையை போக்க வேண்டும் என்றால் கல்வியை வளர்க்க வேண்டும். நமது முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவேன் என்று சொல்லி இருக்கிறார். அவரை நான் பாராட்டுகிறேன். ஆனால் இன்னும் கொஞ்சம் விரிவுபடுத்தி படிக்கின்ற அத்தனை மாணவர்களுக்கும் வெளிநாடுகளைப்போல் வட்டி இல்லா கடனை வழங்கி இந்தியாவில் நாம் கல்வியில் முதல் இடத்தை பிடிக்க வேண்டும்,’’ என்றார்.

 

The post நியூயார்க் பல்கலை மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியதற்காக விஐடி வேந்தர் கோ.விசுவநாதனுக்கு பாராட்டு விழா: மேடையில் முதல்வர் பாராட்டு பத்திரம் வாசிப்பு appeared first on Dinakaran.

Related Stories: