இடைத்தேர்தல் புறக்கணிப்பு அதிமுகவின் முடிவு மேலிட உத்தரவு: ப.சிதம்பரம் பதிவால் பரபரப்பு

சிவகங்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கும் அதிமுகவின் முடிவு மேலிட உத்தரவு என்று ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள பதிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விக்கிரவாண்டி தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடுகிறது. நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது.

பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இதனால் அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள தேமுதிக போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேமுதிகவும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் திமுக-அதிமுகதான் போட்டி என்று கூறி வந்த எடப்பாடி, இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது என்று கூறியது அரசியல் கட்சியினர் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இந்நிலையில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘‘விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கும் அதிமுகவின் முடிவு, பாமக வேட்பாளரின் தேர்தல் வாய்ப்பை எளிதாக்கும் வகையில், மேலிடத்தில் (பாஜ) இருந்து உத்தரவு வந்துள்ளது என்பதற்கு தெளிவான சான்று. பாஜ மற்றும் அதிமுக இரண்டும் பினாமி மூலம் போரிடுகின்றன. இந்தியா கூட்டணியினர் திமுக வேட்பாளர் அமோக வெற்றியை உறுதி செய்ய வேண்டும்’ என்று கூறி உள்ளார். சிதம்பரத்தின் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post இடைத்தேர்தல் புறக்கணிப்பு அதிமுகவின் முடிவு மேலிட உத்தரவு: ப.சிதம்பரம் பதிவால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: