புதுவையை விட்டு கிரண்பேடியை அனுப்ப போராட்டம்: பீரங்கியால் சுட்டாலும் கவலையில்லை உயிர்தியாகத்துக்கும் நாங்கள் தயார்: முதல்வர் நாராயணசாமி ஆவேசம்

புதுச்சேரி: கவர்னர் கிரண்பேடியை திரும்பப்பெற வலியுறுத்தி காங்கிரஸ், கூட்டணி கட்சிகள் சார்பில் தொடர் தர்ணா போராட்டம் நேற்று அண்ணா சிலை அருகே துவங்கியது. இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சலீம் வரவேற்றார். முன்னதாக டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:-  புதுச்சேரியில், வளர்ச்சித் திட்டங்களை முடக்கி மக்கள் மத்தியில் எங்களுடைய அரசுக்கு களங்கம் விளைவிக்கும் செயலை செய்து வருகிறார், கவர்னர் கிரண்பேடி. இந்தியாவிலேயே கவர்னரை கண்டித்து கவர்னர் மாளிகை முன்பே போராட்டம் நடத்திய சரித்திரம் வேறு யாருக்கும் கிடையாது. அப்போது, 27 கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து இரவு-பகலாக போராட்டம் நடத்தினோம். இதற்கு பயந்து கொண்டு டெல்லிக்கு ஓடி போனார் கிரண்பேடி. அங்கிருந்து கொண்டு எங்களை கைது செய்ய வேண்டுமென்று நடவடிக்கை எடுத்தார்.

அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அங்கு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும்போது உங்களுக்கு இங்கு என்ன வேலை? என்று சொன்னார். அதன்பிறகுதான் கிரண்பேடி எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். 4 மணி நேரமாக நடந்த இந்த பேச்சுவார்த்தையில், கூறியபடி கிரண்பேடி நடந்து கொள்ளவில்லை. ஏஎப்டி, பாரதி, சுதேசி போன்ற பஞ்சாலைகளை மூடினார். இலவச அரிசி விவகாரத்தில் மக்கள் விருப்பத்துக்கு மாறாக அரிசி வழங்குவதை தடுத்து பணத்தை வங்கி கணக்கில் போட வைத்தார். எனக்கு மட்டுமே முழு அதிகாரம், எம்எல்ஏவோ, அமைச்சர்களோ, மக்களுக்கோ எந்தவித அதிகாரமும் இல்லை என்று சர்வாதிகாரபோல அவருடைய செயல்பாடு தொடர்கிறது. எனவே, இந்த போராட்டம் 3 அல்லது 5 நாட்களுக்கு நீடிக்கலாம். பீரங்கியே கொண்டு வந்து சுட்டாலும் நாம் போராட்டத்தை கைவிட மாட்டோம். பிரதமர் மோடிக்கு நான் விடுக்கும் சவால் கோரிக்கை. புதுச்சேரியை விட்டு கிரண்பேடியை அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். இந்த போராட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், மல்லாடி கிருஷ்ணாராவ் கமலக்கண்ணன், வைத்திலிங்கம் எம்பி, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத், சிபிஎம் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் தேவ.பொழிலன் உள் பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் திமுக பங்கேற்கவில்லை.

Related Stories: