மந்த நிலையில் இருந்து மீள்கிறது மருந்துத்துறை அத்தியாவசிய மருந்து விலை உயர்வு: சீன மூலப்பொருள் விலை உயர்வு காரணமா?

புதுடெல்லி: கொரோனா ஊரடங்கில் மந்த நிலையில் இருந்து மருந்து விற்பனை, கடந்த செப்டம்பரில் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இருப்பினும், மருந்துகள் விலை அதிகரித்துள்ளதாக, ஆய்வறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. மருந்து உற்பத்தியில் இந்தியா முக்கிய பங்களிப்பு அளித்தாலும், இதற்கு தேவையான மூலப்பொருட்களுக்கு சீனாவையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. கடந்த மாதம், அத்தியாவசிய மருந்து மூலப்பொருட்கள் விலையை சீனா திடீரென 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. உயிர் காக்கும் மருந்து மூலப்பொருட்களுக்கு சீனாவில் இருந்து 90 சதவீத இறக்குமதியை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. சீன நிறுவனங்களின் இந்த நடவடிக்கையால், இந்தியாவில் மருந்து உற்பத்தி செலவு அதிகரிக்கும் வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக மருந்து நிறுவனங்கள் தரப்பில் கூறப்பட்டது.

இதை மெய்ப்பிக்கும் வகையில், மருந்து விலைகள் உயர்ந்துள்ளதாக, மோதிலால் ஓஸ்வால் என்ற நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், கொரோனா பரவலின்போது, பொதுமக்கள் மருத்துவமனைக்கு செல்வதை தவிர்த்தனர். இதனால் புதிதாக மருத்துவர்கள் பரிந்துரை செய்வது வெகுவாகக்  குறைந்து விட்டது. இதன் எதிரொலியாக மருந்து விற்பனை உள்நாட்டுச் சந்தையில் குறைந்து விட்டது. ஆனால், கடந்த செப்டம்பரில் மருந்து விற்பனை சற்று உயரத்  தொடங்கியுள்ளது. இருப்பினும், மருந்து விற்பனை அளவை விட, விலை அடிப்படையில் உயர்வு ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் மருந்து விற்பனை 4 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்த சரிவு 9.2 சதவீதமாக இருந்தது. இத்துடன் ஒப்பிடுகையில் மருந்து விற்பனையில் ஏற்றம் காணப்படுகிறது.

கடந்த செப்டம்பருடன் முடிந்த, நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில், மருந்து விற்பனை அடிப்படையில் முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தை விட 6.5 சதவீதம் சரிந்துள்ளது. அதேநேரத்தில், விலை 4.6 சதவீதம் அதிகரித்துள்ளது என மோதிலால் ஓஸ்வால் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பட்டியலில் இல்லாத மருந்துகளின் விலையை ஆண்டுக்கு 10 சதவீதம் வரை உயர்த்திக்கொள்ள அனுமதி உண்டு. ஆனால், சந்தையில் போட்டி காரணமாக, பெரும்பாலான மருந்து நிறுவனங்கள் இந்த விலை உயர்வை தவிர்த்திருந்தன.

ஒரு சில மருந்துகளுக்கு விலையை சில நிறுவனங்கள் உயர்த்தியிருந்தன என மருந்துத் துறையை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். இதுபோல், அத்தியாவசிய பட்டியலில் இல்லாம மருந்துகள் விலை முந்தைய ஆண்டை விட 4.8 சதீதம் உயர்ந்துள்ளதாகவும், அத்தியாவசியப் பட்டியலில் உள்ள மருந்துகள் விலை 3.6 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் மோதிலால் ஓஸ்வால் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, கிளன்மார்க், அஜந்தா பார்மா மற்றும் சிப்லா ஆகிய நிறுவனங்களின் மருந்து விலை ஓரளவு அதிகரித்துள்ளதைக் காண முடிகிறது என ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Stories: